ரஷ்யா - உக்ரைன்

"இனி இழப்பதற்கு ஏதுமில்லை" கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் உக்ரைன் மக்கள்

"இனி இழப்பதற்கு ஏதுமில்லை" கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் உக்ரைன் மக்கள்

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்திருக்கும் நிலையில், அவர்களை எதிர்த்து போரிடுவதற்காக உக்ரைன் மக்கள் ஆயுதங்களுடன் தெருங்களில் இறங்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதலாக, உக்ரைனின் நாலாப்புறத்தில் இருந்தும் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதலையும், தரை வழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.

உக்ரைன் ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, ரஷ்ய படைகளுக்கு எதிராக பொதுமக்களும் ஆயுதம் ஏந்தி போரிடலாம் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று, ஏராளமான பொதுமக்கள் உக்ரைன் ராணுவத்தினருக்கு துணையாக ரஷ்ய ராணுவப் படைகளை எதிர்த்து போரிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றனர். எந்த நேரம் வேண்டுமானாலும் கீவ் நகருக்குள் ரஷ்யப் படை நுழையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கீவ்வுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்தால், அவர்களை தாக்குவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நவீன ரக துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் சுற்றி வருகின்றனர். வழக்கறிஞர், மருத்துவர் முதல் ஐ.டி. ஊழியர் வரை ஆயுதங்களை ஏந்தி கீவ் தெருங்களில் காத்திருப்பதை காண முடிகிறது.

இதுகுறித்து ஐ.டி. ஊழியர் ரோமோனோவ் கூறுகையில், "எந்தக் காரணத்தை கொண்டும், கீவ் நகரை ரஷ்ய வீரர்கள் கைப்பற்ற விட மாட்டோம். எதிரிகள் கீவ் நகருக்குள் நுழைவது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால், உயிருடன் திரும்புவது கடினம். ஏனெனில், ஆயிரக்கணக்கான மக்களின் கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் இருக்கின்றன. எந்தப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை கூட ரஷ்ய வீரர்களால் கணிக்க முடியாது. இப்படி ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். எங்கள் உயிர் போனால் தான், கீவ் அவர்கள் வசமாகும்" என அவர் கூறினார்.