ரஷ்யா - உக்ரைன்

உக்ரைன் மக்களுக்கு தஞ்சம் அளிக்கும் இந்திய உணவகம்

உக்ரைன் மக்களுக்கு தஞ்சம் அளிக்கும் இந்திய உணவகம்

ஜா. ஜாக்சன் சிங்

ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு இந்திய உணவகம் ஒன்று தஞ்சம் அளித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனில், உயிரை கையில் பிடித்துக் கொண்டு, குடியிருப்புகளின் கீழ் தளங்களிலும், மெட்ரோ போன்ற இடங்களிலும் மக்கள் தஞ்சம் அடைவதை காண முடிகிறது. இப்படி ஆங்காங்கே சிதறிச் சென்றுக் கொண்டிருக்கும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது சோகோலிவ் என்ற இடத்தில் உள்ள ஒரு இந்திய உணவகம்.

வணிகக் வளாகத்தில் தரைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள தளத்தில் செயல்படும் இந்த உணவகத்தின் பெயர் சத்யா ரெஸ்டாரண்ட். போர் தொடங்கியபோது, குழந்தைகள், கருவுற்றோர், மாணவர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் இங்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவுகளை உணவகம் வழங்கி வருகிறது. வீட்டை விட்டு வெளியேறிய தங்களுக்கு இந்த உணவகம் வீடு போன்று பாதுகாப்பாக இருப்பதாக, தஞ்சமடைந்தவர்கள் கூறுகின்றனர்.

இன்னும் 4 அல்லது 5 நாட்கள் மட்டுமே காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக கூறும் உணவகத்தின் உரிமையாளர் மணிஷ் தவே, அதுவும் தீர்ந்துவிட்டால் விருந்தினர்களுக்கு எப்படி உணவளிப்பது எனத் தெரியவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார். அரிசி, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் நீடிப்பதாகவும் உணவக உரிமையாளர் மணிஷ் தவே தெரிவித்துள்ளார்.