ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்மீது பேசிய இந்தியாவுக்கான ஐ.நா. பிரதிநிதி திருமூர்த்தி, மனித உயிர்களைப் பறிப்பது எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது என்று கூறினார்.
உக்ரைனில் நேரிட்டு வரும் சம்பவங்கள் இந்தியாவை பெரிதும் வருத்தமடையச் செய்துள்ளன. உக்ரைனில் உடனடியாக வன்முறையை கைவிட்டு போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது. மனித உயிர்களைப் பறிப்பதன்மூலம் எந்த பிரச்னைக்கும் தீர்வு காணமுடியாது என இந்தியா நம்புகிறது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்களின் நலன் குறித்து அரசு பெரும் கவலை கொண்டுள்ளது. ஐ.நா. வகுத்துள்ள சர்வதேச விதிகளை அனைவரும் பின்பற்றவும், ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் மதித்து நடக்க இந்தியா வலியுறுத்துகிறது.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாண உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என இந்தியா விரும்புகிறது. ரஷ்யா - உக்ரைன் விஷயத்தில் தூதரகரீதியான முயற்சிகள் கைவிடப்பட்டது வருத்தமளிப்பதாகவும், உடனடியாக அந்த வழிக்கு திரும்ப இந்தியா வலியுறுத்துவதாகவும் இந்தியாவுக்கான ஐ.நா. பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்தக் காரணங்களால் தீர்மானத்தின் மீது நடுநிலை வகிக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் திருமூர்த்தி குறிப்பிட்டார்.