ரஷ்யா - உக்ரைன்

கார்கிவ் நகரில் சிக்கிய இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கார்கிவ் நகரில் சிக்கிய இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Sinekadhara

உக்ரைனின் கார்கிவ் நகரில் மேலும் சில மோசமான சூழல் நிலவ வாய்ப்பு இருப்பதால் அங்கிருக்கும் இந்தியர்களுக்கு சில முக்கியமான அறிவுரைகளை வெளியுறவு அமைச்சகம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கார்கிவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் 10 பேர் கொண்ட குழுவாக இணைந்து இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவினரும் கைகளில் வெள்ளை கொடியோ அல்லது வெள்ளை நிற துணியையோ ஆபத்து காலத்தில் அசைத்து காட்டுவதற்கு வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவையும், குடிநீரையும் வீணாக்காமல் இருக்கவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில், முழு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவு இருப்பை நீட்டிக்க கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கார்கிவ் நகரில் விமானப்படைகள் மூலம் வான்வழித் தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்கள், வெடிகுண்டு தாக்குதல்கள் என மோசமான சூழல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கார்கிவ் நகரில் சிக்கியிருக்கும் இந்திய குழுக்களில் யாரேனும் ஒருவரிடமாவது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சிறிய கிட்கள் எப்போதும் இருப்பது அவசியம். பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வருவதற்கு உகந்த நேரம் கிடைத்தால், பனிக்கட்டிகளை உருக்கி அதை நீராக மாற்றி சேமித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட சிறு, சிறு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுவையும் ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது அவசியம் என்றும், யார் எங்கே இருக்கிறார்கள்; எங்கே சென்றுள்ளார்கள் என்பது அந்த ஒருங்கிணைப்பாளருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாக போர் சமயங்களில் பதற்றம் அடையாமல் எல்லாம் கடந்து போகும் என்ற வலிமையான மனோதிடத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.