ரஷ்யா - உக்ரைன்

"உக்ரைனில் இருந்து நடந்தாவது வெளியேறுங்கள்" - இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

"உக்ரைனில் இருந்து நடந்தாவது வெளியேறுங்கள்" - இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைனின் கார்கிவ் நகரில் போர் சூழல் தீவிரமாகி வருவதால், அங்குள்ள இந்தியர்கள் அந்நகரை விட்டு நடந்தாவது வெளியேறுங்கள் என்று இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்வை அடுத்து, இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் கார்கிவை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றன. அவர்களுக்கு உக்ரைன் ராணுவமும், பொதுமக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அங்கு போர் சூழல் தீவிரமாகியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்களை உடனடியாக கார்கிவில் இருந்து வெளியேறும்படி இந்தியத் தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், "பேருந்து, ரயில் வசதி இல்லை என்றாலும் கூட, கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறி விடுங்கள்; கார்கிவ் நகருக்கு அருகில் இருக்கும் பெசோஷின், பபாயி உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவில் இடம்பெயருங்கள்" என அந்த அறிவிப்பில் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கார்கிவ் நகரில் இருந்து ரயில் மூலம் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல விடாமல் உக்ரைன் காவலர்கள் தடுப்பதாக இந்திய மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரயில், பேருந்து போன்றவற்றை பயன்படுத்த உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.