செர்னோபில் நகரில் உள்ள அணு உலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம்; எனவே அந்நகரில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. எனினும், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சிக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
உக்ரைன் ராணுவத் துருப்புகள் கீவ்வை சுற்றி அரண் போல நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அந்நகரை ரஷ்யப் படைகள் எளிதில் கைப்பற்ற முடியவில்லை. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கீவ் மீது ரஷ்ய ராணுவம் வான் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனின் செர்னோபில் நகரை ரஷ்ய ராணுவம் அண்மையில் கைப்பற்றியது. அந்த நகரில்தான் 1986-இல் பெரும் விபத்துக்குள்ளான அணு உலை அமைந்திருக்கிறது. தற்போது, அந்த அணு உலை செயல்படாததால் அதற்கு அருகே முகாமிட்டிருக்கும் ரஷ்ய ராணுவம், தங்கள் ஆயுதங்களையும் அந்தப் பகுதியில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ரஷ்யாவை உக்ரைன் அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது.
இதுதொடர்பாக உக்ரைன் பிரதமர் இரினா வெரெஷ்சுக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "செர்னோபில் அணு உலைக்கு மிக அருகில் ரஷ்யா ஆயுதங்களை வைத்திருக்கிறது. ஒருவேளை, போரின் போது அந்த ஆயுதங்கள் வெடிக்க நேரிட்டால், அணு உலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்படும். அணு உலை செயல்படாவிட்டாலும் அதற்குள் ஏராளமான வேதிப்பொருட்கள் இருப்பதால், சிறு அலட்சியம் கூட மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுத்துவிடும். எனவே அந்த நகரில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.