கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமப்புற பள்ளி ஒன்றில் நடந்த வான்வழித் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக லுகான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய லுகான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஜி கைடாய், " எங்கள் பிராந்தியத்தில் உள்ள பிலோகோரிவ்கா கிராமம் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது பள்ளியின் மீது குண்டுகள் விழுந்ததில் அது முற்றிலும் அழிக்கப்பட்டது. அங்கு தாக்குதல் நடத்தப்பட்டபோது மொத்தம் 90 பேர் இருந்தனர், அவர்களில் 27 பேர் காப்பாற்றப்பட்டனர். எனவே பள்ளியில் இருந்த அறுபது பேர் இறந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது" என தெரிவித்தார்.
ரஷ்ய படைகள் மேலும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சுறுத்தல் காரணமாக மீட்புப் பணியாளர்கள் நேற்று இரவில் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியவில்லை, எனவே இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், இதற்கு பக்கத்து கிராமமான ஷெபிலிவ்காவில் 11 பேர் தங்கியிருந்த ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிர் தப்பியவர்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
பிப்ரவரி 24 இல் தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 70 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. முதலில் தலைநகர் கீவ் உட்பட அனைத்து நகரங்களையும் தாக்கிய ரஷ்யா, இப்போது கிழக்கு உக்ரைன் பகுதிகளை கடுமையாக தாக்கி வருகிறது.