ரஷ்யா - உக்ரைன்

உக்ரைன் ராணுவத் தளம் மீது ஏவுகணை தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு

உக்ரைன் ராணுவத் தளம் மீது ஏவுகணை தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு

ஜா. ஜாக்சன் சிங்

போலந்து எல்லை அருகே அமைந்துள்ள உக்ரைனின் முக்கிய ராணுவத் தளம் மீது ரஷ்யா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் சில ராணுவ வீரர்கள் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், அங்கு தற்போது ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. பல முக்கிய நகரங்களை குறிவைத்து, வான் வழி தாக்குதலையும் ரஷ்யா முடுக்கி விட்டிருப்பதால் அங்கு போர் சூழல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய படைகளுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் இரு தரப்பிலுமே அதிக அளவில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு உக்ரைனின் ல்வைவ் நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் முக்கிய ராணுவத் தளம் மீது ரஷ்ய ராணுவம் இன்று பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் அங்கிருந்த சில ராணுவ வீரர்கள் உட்பட 35 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளனர். 134-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேட்டோ நாடுகளின் ஒன்றான போலந்து நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த ராணுவத் தளம், உக்ரைனுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவும் விதமாக, நேட்டோ நாடுகள் சார்பில் வழங்கப்பட்ட ஆயுதங்கள், போலந்து எல்லை வழியாக இந்த ராணுவத் தளத்துக்குதான் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ராணுவத் தளம் தற்போது தாக்கப்பட்டிருப்பது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.