அமெரிக்க பயணத்தின் போது நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசிய எலான் மஸ்க், இந்தியாவில் எலட்ரிக் கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு டெஸ்லா நிறுவனம் விரும்புவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் கார்கள் தயாரிக்கும் வகையில் ஆலை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் திட்டம் நிறைவேறும் பட்சத்தில், அக்கார் நிறுவனம் இந்தியாவின் 3ஆவது பெரிய கார் தயாரிப்பாளராகும் வாய்ப்புள்ளது. முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார்களை இந்தியாவில் சந்தைப்படுத்தும் வகையில் கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியது. இந்த கார்களின் விலை, குறைந்தபட்சமாக 20 லட்சம் ரூபாய் இருக்கலாமென கணிக்கப்படுகிறது.
அப்போது, “வரியை குறைக்க இயலாது. ஆனால் இங்கேயே உற்பத்தி செய்தால் சலுகைகள் தருகிறோம்” என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருந்தது. இதையடுத்து இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு ஆலையை அமைக்க டெஸ்லா முனைப்பு காட்டி வருகிறது.
இந்தியாவில் கார்கள் தயாரிக்கப்பட்டால், அவற்றை கடல் வழியாக இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் சுலபம் என்பதால்தான் டெஸ்லா தனது ஆலையை இந்தியாவில் ஆரம்பிப்பதாக சொல்லப்படுகிறது.