Mark Boucher & Rohit Sharma File Image
Cricket

'பிரேக் தேவைப்பட்டால் ரோகித்தே எங்களிடம் சொல்லுவார்'- கவாஸ்கரின் கருத்துக்கு மார்க் பவுச்சர் பதிலடி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ரோகித் சர்மா கொஞ்சம் 'பிரேக்' எடுத்துக் கொள்ள வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறிய கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர்.

Justindurai S

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 7 போட்டிகளில் விளையாடி உள்ள கேப்டன் ரோகித் சர்மா 181 ரன்கள் எடுத்துள்ளார்.

Sunil Gavaskar

இச்சூழலில்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு உடல் தகுதியுடன் இருக்கும் வகையில் ரோகித் சர்மா கொஞ்சம் 'பிரேக்' எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த ஓய்வின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும். இந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் விளையாட மீண்டும் வரலாம். ஆனால், இப்போதைக்கு அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது தேவையான ஒன்று” என கூறியிருந்தார்.

இந்நிலையில், கவாஸ்கரின் கருத்துக்கு பதிலளித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், "ரோகித் சர்மா ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது அணியின் விருப்பமும் கிடையாது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவதையே நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், அவர் ஒரு சிறந்த வீரர், சிறந்த கேப்டன். ஒருவேளை ரோகித்துக்கு ஓய்வு தேவைப்பட்டால், அவரே வந்து எங்களிடம் சொல்லிவிடுவார். அதன்பிறகு அதுகுறித்து முடிவெடுப்போம். ஆனால், ரோகித் சர்மா இதுவரை எந்த கோரிக்கையையும் எங்களிடம் வைக்கவில்லை. எனவே, அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடர்ந்து விளையாடுவார்'' என்றார்.