Milk Varieties  Representational Image | Freepik
லைஃப்ஸ்டைல்

ஆர்கானிக் பால் முதல் அரிசிப்பால் வரை... பசும்பாலுக்கு மாற்றாக, இத்தனை பால் வகைகள் இருக்கா?! #MilkDay

பால் வேண்டாம் என சொல்பவர்கள், லேக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்னை இருப்பவர்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய, பசும்பால் அல்லாத நிறைய மாற்று பால் வகைகள் சந்தையில் உள்ளன. அவற்றை நமக்கு பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி.

ஜெ.நிவேதா

பாலின் நன்மைகள் மற்றும் உணவில் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது.

World Milk Day

பாலில் வைட்டமின்கள், புரதங்கள், கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் பெரும்பாலான மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பால் நுகர்வு முக்கிய பங்கு வகிக்கிறது.

பால் என்றாலே, நமக்கு பசும்பால் தான் நினைவுக்கு வரும். ஆனால், உலகெங்கிலும் உள்ள மக்கள் தொகையில் சுமார் 70 - 75% பேர் பசும்பாலில் உள்ள சர்க்கரையான லாக்டோஸுக்கு ஒவ்வாமையுடனே இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியானவர்கள், பாலின் நன்மையை எப்படித்தான் பெறுவது? அவர்களுக்காகவே, பசும்பால் அல்லாத நிறைய மாற்று பால் வகைகள் உள்ளன. அவை அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. அவற்றை நமக்கு பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி.

ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி, MSc. CN, CDE, CCN.

பால் வகைகள்:-

1. ஆடை நீக்கிய பால் (Skimmed milk)

Skimmed milk

பசும்பாலில் உள்ள அனைத்து கொழுப்பு உள்ளடக்கங்களையும் நீக்கிவிட்டு தயாரிக்கப்படும் பால் வகை இது. இதில் கொழுப்பு 0.5% என்றும் திட கொழுப்பு இல்லாத உள்ளடக்கம் 8.7% என்றும் இருக்கும்.

2. லாக்டோஸ் இல்லாத பால் (Lactose free milk)

Lactose free milk

பசும்பாலில் இயற்கையாக உள்ள சர்க்கரை லாக்டோஸ், செயற்கையாக நீக்கப்படும். இவ்வகை பாலில், பசும்பாலில் உள்ள பிற சத்துகளான வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதம் போன்ற அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்கும்.

3. சோயா பால் (Soya milk)

Soya milk

சோயாபீன் அல்லது சோயா புரதம் ஆகியவற்றில் இருந்து இந்த சோயா பால் தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மதிப்பில் பசும்பாலுடன் மிகவும் ஒத்திருக்கும் இவ்வகை பால், Creamy தன்மையுடனும், லேசான இனிப்புச் சுவையுடனும் இருக்கும். குறைந்த கலோரிகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகளுடன் இது இருக்கும். இதில், பசுவின் பாலில் உள்ள அதே அளவு புரதம் இருக்கும். மற்றும் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியது இது.

4. பாதாம் பால் (Almond Milk)

Almond Milk

பாதாம் பாலில் லேசான இனிப்புச்சுவை இருக்கும். இவ்வகை பாலில் கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும். ஆனால் வைட்டமின் இ நிரம்பியுள்ளது. இவையாவும் உடல் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அபாயத்தைத் தடுக்கிறது.

5. தேங்காய்ப் பால் (Coconut Milk)

Coconut Milk

தேங்காய் பால், Creamy-ஆக இருக்கும். பெரும்பாலும் நம் வீடுகளிலேயே இது அன்றாடம் செய்வதுண்டு! இதில் பால் போலவே இயற்கையாக இனிப்புச் சுவை இருக்கும். அதேநேரம் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருக்காது. மேலும் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்யாது. ஆனால் குறைந்த கார்ப் உணவை உட்கொள்ள நினைப்பவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ். எடை இழப்பையும் இவ்வகை பால் ஊக்குவிக்கிறது.

6. ஓட்ஸ்  பால் (Oats Milk)

Oats Milk

ஓட்ஸ் பால் வழக்கமான பாலுக்கு சிறந்த ஆரோக்கியமான மாற்றாகும். மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு இது சிறந்த ஆப்ஷன்! ஏனெனில் ஓட்ஸ், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக இருக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது என்பதால் எலும்புகளுக்கும் நல்லது; இதய ஆபத்தையும் குறைக்கிறது.

7. அரிசி பால் (Rice milk)

Rice milk

இவ்வகை பால், வெள்ளை அல்லது பழுப்பு அரிசியை தண்ணீரில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஸ்வீட் மற்றும் ஸ்மூத்திகளில், இதை பயன்படுத்தலாம். மற்ற வகை பாலை விட அதிக கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கும் இவ்வகை பாலில், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்ததிருக்கும். அதேநேரம் குறைந்த அளவு புரதம் மற்றும் கால்சியமுமே இதில் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இவ்வகை பால் உதவும்.

8. முந்திரி பால் (Cashew milk)

Cashew milk

இது முந்திரிகளில் தண்ணீர் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இயல்பிலேயே இனிப்பு இருப்பதால் ஸ்மூத்திகள், காபி மற்றும் ஸ்வீட்களில் இதை பயன்படுத்தலாம். இதில் கலோரிகள், புரதம் மற்றும் சர்க்கரைச்சத்து ஆகியவை குறைவாகவே இருக்கும். இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது, கண் ஆரோக்கியத்தை வழங்குவது, ரத்தம் உறையாமல் காப்பது, ரத்த சர்க்கரை அளவை குறைப்பது, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பல நன்மைகள் இவ்வகை பாலில் உள்ளன.

பாலில், இன்னும்கூட பல்வேறு வகைகள் உள்ளன. ‘எனக்கு லாக்டோஸ் இண்டாலரன்ஸ் பிரச்னை இல்லை. ஆனால் பால் குடிக்க பிடிக்கவில்லை; அதன் மனம் / ருசி எனக்கு பிடிக்கவில்லை’ என்பவர்களுக்கென்றே, பல வகைகளில் சந்தைகளில் பால் கிடைக்கிறது.

உதாரணத்துக்கு கொழுப்பு இல்லாத பால், முழு கொழுப்புள்ள பால், டோன்ட் பால், இரட்டை நிற பால், தரப்படுத்தப்பட்ட பால், முழு கிரீம் பால், ஆடை நீக்கிய பால், சுவையூட்டப்பட்ட பால், ஆர்கானிக் பால் என பல வகைகள் சந்தைகளில் உள்ளன. அவற்றில் உங்கள் உடல்நிலைக்கு ஏற்றதை மருத்துவர் / ஊட்டச்சத்து நிபுணர் வழிகாட்டுதலுடன் எடுத்துக்கொள்ளுங்கள்!