மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் File image
லைஃப்ஸ்டைல்

இந்த நிபுணத்துவம் இல்லா Therapist, Sex Educator, Behaviour Analyst, Trainer ஆலோசனைகளை பெறவே கூடாது!

“மாத்திரை மருந்துகளை எப்படி நிபுணத்துவம் இல்லாதவரிடமிருந்து பெற்றால் ஆபத்தோ, அப்படித்தான் மனநல ஆலோசனைகளும். சொல்லப்போனால் போலி நபர்களிடையே தெரபி - கவுன்சிலிங்கெல்லாம் செல்கையில், இல்லாத பிரச்னையும் சேர்ந்துகொள்ளும்”

ஜெ.நிவேதா

கடந்த இரு தினங்களாகவே உடல் மற்றும் மனநலன் தொடர்பான ஆன்லைன் வொர்க்‌ஷாப்ஸ் பற்றிய விவாதங்கள் இணையத்தில் அதிகம் எழுகின்றன. ‘இதுக்கெல்லாமா வொர்க்‌ஷாப் வைப்பீங்க’ எனும் அளவுக்கு புதுப்புது விஷயங்களுக்கு வொர்க்‌ஷாப்ஸ் வைக்கப்படுகிறது. அதுவும் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி செல்லவேண்டியவை. இதில் எத்தனை வொர்க்‌ஷாப்ஸ் நிபுணத்துவம் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது என்றால் கேள்விக்குறிதான். பின் என்ன நம்பிக்கையில் மக்கள் செல்கிறார்கள்? அதற்கும் பதிலில்லை. ஆனாலும் செல்கிறார்கள்!

இது ஆரோக்கியமானதா என்றால், ‘இல்லை’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் “Parenting Workshop மட்டுமல்ல, இவை போன்று ஆயிரம் workshop இயங்குகின்றன. Psychology அல்லது Counseling துறையில் ஏதாவது ஒரு certificate course படித்துவிட்டு professional என சொல்லி ஏமாற்றும் அத்தனையும் Scam. சொல்லிவைத்தால் போல அத்தனையும் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, ஏனென்றால் அந்த துறையில் தான் எது போலி என்று கண்டறிவது கடினம். கொஞ்சம் ஆன்லைன் presence, சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களுடன் ஒரு படம், கொஞ்சம் Intellectual Appearance போதும் சுலபமாக அனைவரையும் வலைக்குள் விழ வைத்துவிடலாம்.

மற்ற scam களை போல இங்கு இழப்பு வெறும் பணம் மட்டுமல்ல.. எட்டு வயது பெண்ணிற்கு Porn ஐ அறிமுகப்படுத்துவதனால் பின்னாளில் ஏற்படப்போகும் உளவியல் சிக்கல்கள் தான் இவற்றின் உண்மையான ஆபத்து.

இனிவரும் காலத்தின் ஆகப்பெரிய பிரச்னை உளவியல் பிரச்சினைகளே! அதையொட்டிதான் இந்த துறையில் Scam ஏராளமாக பரவிக்கொண்டிருக்கின்றன.
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

இது ஒரு உலகளாவிய பிரச்னை. நாம் தான் விழிப்புடன் இருந்து போலிகளை அடையாளம் காண வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் மருத்துவர் சிவபாலன்.

அவரிடம் இதுபற்றி விரிவாக பேசினோம்.

‘குறுகிய காலத்தில் கிடைக்கும் ஆன்லைன் பாப்புலாரிட்டியை வைத்து...’

“சமீப காலமாகவே ஆன்லைன் கவுன்சிலிங் - ஆன்லைன் தெரபி - ஆன்லைனிலேயே ஆர்ட் தெரபி - மியூசிக் தெரபி - லைஃப்ஸ்டைல் வொர்க்ஷாப்ஸ் - கர்ப்பகால வொர்க்ஷாப்ஸ் - தாய்ப்பால் குறித்த வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் - பாலியல் புரிதலை ஏற்படுத்தும் வொர்க்ஷாப்ஸ் என பல தெரபிகளும் வொர்க்ஷாப்ஸ்களும் நடக்கின்றன. இவற்றை நடத்துவோர், தங்களை தெரபிஸ்ட்களாக காட்டிக்கொண்டு அதன்மூலம் சமூகவலைதளங்களில் பிரபலமடைந்துவிடுகிறார்கள்.

இன்றைய சூழலில் நாம் எல்லோருமே பொருளாதார ரீதியாகவோ குடும்ப அமைப்பின் காரணமாகவோ வேலை சார்ந்தோ ஏதாவதொரு வகையில் மன அழுத்தத்தோடுதான் இருக்கிறோம். தனிக்குடும்பங்கள் அதிகரித்திருப்பதால், குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோருக்கு பயம் அதிகரிக்கிறது. அதைத்தான் இப்படியான ஸ்கேம் செய்யும் நபர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். ‘நான் உங்களுக்கு அட்வைஸ் சொல்கிறேன், ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் பற்றி சொல்கிறேன், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சொல்கிறேன்’ என வந்துவிடுகிறார்கள்.

ஆனால் இது மிக மிக ஆபத்தான போக்கு. மாத்திரை மருந்துகளை எப்படி நிபுணத்துவம் இல்லாதவரிடமிருந்து பெற்றால் ஆபத்தோ, அப்படித்தான் மனநல ஆலோசனைகளும். சொல்லப்போனால் போலி நபர்களிடையே தெரபி - கவுன்சிலிங்கெல்லாம் செல்கையில், இல்லாத பிரச்னையும் சேர்ந்துகொள்கிறது.

இவர்கள் அதிகம் மாஸ் ஆடியன்ஸூக்குத்தான் கருத்து சொல்வார்கள். அதனால் இவர்களின் கருத்துகள் பெரும்பாலானவை பிரசவம் சார்ந்து - குழந்தை வளர்ப்பு சார்ந்து - ஆபாசப் படங்களை பார்ப்பது - டீனேஜ் மாற்றங்கள் சார்ந்து - தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் சார்ந்துதான் அதிகம் இருக்கும். இவர்களால் தனிநபர் ஆலோசனை கொடுக்க முடியாது. அப்படியே கொடுத்தாலும், சுயமாக தாங்கள் எதிர்கொண்டவற்றை மட்டும் அடிப்படையாக வைத்து ஆலோசனை கொடுப்பார்கள்.

“8 வயது குழந்தைக்கு எதற்கு ஆபாசப்படம்?”

சமீபத்தில் ஒருசிலரெல்லாம் குழந்தைகளுக்கு ஆபாசப்படங்கள் காண்பிப்பது குறித்து பேசுகின்றனர். குழந்தைகளுக்கு ரியாலிட்டி எது, ஃபேன்டஸி எது என்பதை பிரித்து உணரும் திறன் இருக்காது. அப்படியானவர்களிடத்தில், ஆபாசப்படம் காட்டும்போது பிற்காலத்தில் அவர்கள் குழப்பமடைவர். உண்மையை உணர்வதில் சிக்கலை எதிர்கொள்வர். பாலியல் புரிதலையெல்லாம் சரியான வயதில், சரியான வகையில் ஏற்படுத்தவேண்டும். இல்லையெனில் மோசமான பின்விளைவுகள் வருங்காலத்தில் ஏற்படும்.

முதலில் 8 வயது குழந்தைக்கு எதற்கு ஆபாசப்படம்? அந்த வயதில் ஆபாசப்படத்தை காணுமொரு குழந்தை, எதிர்பாலினத்தவரை எதிர்கொள்வதில் பெரும் உளவியல் சிக்கலை கொண்டிருப்பர். ‘இவங்க நம்மளை இந்த கண்ணோட்டத்தில்தான் பாக்கிறாங்களோ’ என்ற அச்சம் அந்தக்குழந்தையின் மனதில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது அவர்களை தவறாக வழிநடத்தும். உறவுச்சிக்கல்களை கொடுக்கும். இவை எல்லாம் சேர்ந்து, அவர்களின் படிப்பு - அறிவு - ஆற்றல் - உறவு என எல்லாவற்றிலுமே பாதிப்பு ஏற்படும்.

ஆக, பண இழப்பு என்பதை தாண்டி, வாழ்க்கையே பிரச்னைக்குள்ளாகும் அளவுக்கு சிக்கல் உள்ளது.

தன்னிச்சையாக செயல்பட யார் தகுதியுள்ள தெரபிஸ்ட்?

எனில் கவுன்சிலிங் - தெரபிக்களே போகக்கூடாதா என்றால் அப்படியல்ல. தெரபியையோ கவுன்சிலிங்கையோ ஆன்லைனில் பெறுவதை தவிர்க்கவும். முடிந்தவரை நேரடியாக சென்று ஆலோசனை பெறுங்கள்.

* MBBS முடித்துவிட்டு, MD Psychiatry முடித்த மனநல மருத்துவர்கள்தான் தெரபியையோ கவுன்சிலிங்கையோ தன்னிச்சையாக கொடுக்க தகுதியானவர்கள்.

* M Phil Clinical Psychology முடித்துவிட்டு RCI (Rehabilitation Council of India)-வில் Clinical Psychiatry பதிவுசெய்த Clinical Psychologists-கள் தன்னிச்சையாக தெரபியோ கவுன்சிலிங்கோ கொடுக்கலாம்.

* MD Psychiatry மற்றும் DPM (Diploma in Psychological Medicine) முடித்த மருத்துவர்களும் தகுதியானவர்கள்.

ஆகவே, நீங்கள் கவுன்சிலிங் செல்கின்றீர்கள் எனில், அந்த நபர் இந்த அடிப்படையில் சைக்காட்ரிஸ்ட்டா, சைக்காலஜிஸ்ட்டா என பாருங்கள். இது இரண்டும் இல்லாமல், ஒருவர் தன்னிச்சையாக செயல்பட்டால் அவரிடம் செல்லவேண்டாம்.

‘Staff Nurse போலத்தான் இவர்களும்!’

இந்த இடத்தில் ‘எனில் பிறர் தகுதியற்றவர்களா’ என்றால், அவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதற்கு தகுதியற்றவர்கள்தான். அதே சமயம், தன்னிச்சையாக செயல்படும் ஒரு மருத்துவரோடு இணைந்து குழுவாக இணைந்து இவர்கள் செயல்படலாம். ஸ்டாஃப் நர்ஸ் எப்படி மருத்துவம் பார்க்க முடியாது - ஆனால், மருத்துவர் அறிவுரைப்படி மேற்பார்வையின்கீழ் செயல்பட முடியுமோ அப்படித்தான் இவர்களும்.

ஸ்டாஃப் நர்ஸ் தனியாக செயல்பட்டு மருத்துவம் பார்ப்பது போன்ற நடைமுறைதான் இந்த கவுன்சிலர்கள் செய்யும் ஆன்லைன் தெரபிக்களெல்லாம். ஸ்டாஃப் நர்ஸ் அப்படி செயல்பட்டால் உடல்நல சிக்கல் ஏற்படும் என்பதுபோல, இவர்கள் தனித்து செயல்படுவதால் எக்கச்சக்க உளநல சிக்கல்கள் ஏற்படுகின்றன. மிக மிக மிக எச்சரிக்கையாக வேண்டிய தருணம் இது” என்றார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

அற்பப் புகழுக்காவும், பணத்துக்காகவும் இணையத்தில் தன்னைத்தானே எக்ஸ்பர்ட் என சொல்லிக்கொண்டு இப்படியான சென்சிட்டிவ் விஷயங்களைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சமூகப் பொறுப்புணர்ந்து அவர்களாகவே இவற்றைக் குறைத்துக்கொள்வது நலம். அகண்டு விரிந்திருக்கும் இணைய வெளியில் எல்லாவற்றிலும் அரசின் கட்டுப்பாடுகளை நாம் எதிர்பார்க்க முடியாது. உடல் பருமன், டிரேடிங், பாலியல் சந்தேகங்கள், பாக்ஸ் ஆஃபீஸ் ரெக்கார்ட் என எல்லாவற்றைப் பற்றியும் வீடியோக்கள் இணையத்தில் கொட்டப்படுகின்றன. இப்படி பேசுபவர்களுக்கு அந்தத் துறையில் குறைந்தபட்ச நிபுணத்துவம் இருக்கிறதா என்றுகூட ஸ்க்ரோல் செய்யும் யாரும் யோசிக்கப்போவதில்லை. வைரல் விஷம் அனைவரின் மூளைக்கும் மொபைல் வழி ஷேர் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதிலும் இதுமாதிரியான சென்சிட்டிவ் விஷயங்களில் தங்கள் குழந்தைகளை பேச வைப்பதைவிட ஆபத்து எதுவுமில்லை. பண முதலீடு என்னும் பெயரில் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தெரிந்தே பாழாக்குகிறார்கள் இத்தகைய இணைய எக்ஸ்பெர்ட்டுகள் என்பது மட்டும் நிஜம்.