கேரள ஆளநருடன் தனுஜா குமாரி pt web
இலக்கியம்

“கனவிலும் எதிர்பார்க்கவில்லை” - பல்கலைக்கழகங்களில் பாடமாகும் கேரள தூய்மைப் பணியாளரின் புத்தகம்!

தனது முதல் புத்தகத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால், செங்கல்சூலை காலணியின் வரலாறு தொடர்பான புத்தகத்தையும் எழுதி வருகிறார் தனுஜா குமாரி..

Angeshwar G

செங்கச்சூலா காலணி

கேரளாவில் அதிக மக்கள் தொகைக் கொண்ட குடிசைப் பகுதிகளில் ஒன்று ராஜாஜி நகர். இப்பகுதியின் பழைய பெயர் செங்கல்சூலா காலணி. திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தின் பின் அமைந்துள்ளது இப்பகுதி. செங்கற்களை தயாரிப்பதற்கான மண் இப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதால் செங்கல்சூலா காலணி என மக்கள் மனதில் பதிந்து பின் ராஜாஜி நகர் என்றானது.

சுமார் 12.6 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்திருக்கிறது இக்காலணி. நலத்திட்டங்களின் மூலம் மக்கள் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என அரசு கொடுக்கும் அறிவிப்புகளுக்கும், மக்களுடைய வாழ்வின் எதார்த்த சூழலுக்கும் இடையே இருக்கும் பாரதூர வித்தியாசத்தை, கள்ளங்கபடமில்லாது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது இப்பகுதி.

ராஜாஜி நகர் எனும் செங்கல்சூலா காலணி

திருவனந்தபுரம் நவீன வசதிகளுடன், காலத்திற்கு ஏற்ப மாறுதல்களைப் பெறும். ஆனால், செங்கல்சூலா பகுதி மக்களுக்கு மட்டும் விடிவு என்பதோ நாற்பதாண்டுகளுக்கும் மேல் வராமல் இருந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டுதான் கேரள அரசின் உள்ளாட்சித் துறை, ராஜாஜி நகரின் மறுவடிவமைப்புத் திட்டத்தை அறிவித்தது. ஸ்மார்ட் சிட்டி திருவனந்தபுரம் லிமிட்டெட்-ன் கீழ் ரூ. 61.42 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், சில தினங்களுக்கு முன்புதான் தொழில்நுட்ப மதிப்பீடுகள் முடிந்தன. மறுசீரமைப்புப் பணிகள் இனிதான் தொடங்கப்படவே இருக்கின்றன. இந்த இழுத்தடிப்புக்கு பின் 1,100 குடியிருப்புகளில் உள்ள, 2,000 குடும்பங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நம்மால் உணரமுடிகிறதுதானே? இப்பகுதிகளில் இருக்கும் மக்கள் குற்ற வழக்குகளில் ஈடுபடுவதாக அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவங்களும் நடக்கும்... அதன்பின் இருக்கும் அரசியல் வேறென்றாலும், இதன் காரணமாகவே இப்பகுதி அடிக்கடி பேசுபொருளாகவும் ஆனது.

தனுஜா குமாரி

இப்பகுதியில் வசிப்பவர்தான் தனுஜா குமாரி. இவரது தந்தை கிறிஸ்த்தவர். தாய் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்பதால், இவரின் குடும்பம் கஷ்டத்தில் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் குடும்பம் உடைந்த நிலையில், 9 ஆம் வகுப்பில் பள்ளியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் தனுஜா குமாரி.

எழுத்தாளர் தனுஜா குமாரி

பின்னர் அவரும் அவரது சகோதரரும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் இடங்களில் வாழ நேர்ந்தது. சாதியப்பாகுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என பல இன்னல்களைச் சந்தித்த தனுஜா, அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவரை மணந்துகொண்டார். இதன்பின்னர் வாழ்வில் சற்றே மீண்டு வந்தார் தனுஜா. இவர்களுக்கு சுதீஷ், நிதீஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இத்தகைய சூழலில்தான் அவரது சகோதரர் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.)

அனுபவங்களை எழுதிய தனுஜா குமாரி

வாழ்வில் இப்படி என்னென்னவோ கஷ்டங்கள் வந்தபோதும், எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் தனுஜா, உடைந்தோ முடங்கியோ போகவில்லை. தற்போது, திடக் கழிவு மேலாண்மைக்காக கேரளாவின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, கேரள உள்ளூர் நிர்வாகக் கழகத்துடன் இணைந்து நடத்தும் ஹரித கர்மா சேனாவில் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார் தனுஜா.

தனுஜா

இந்நிலையில், தனுஜா செங்கல்சூலாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தனக்காக பதிவு செய்யத் தொடங்கினார். அச்சமயத்தில்தான் (2014 ஆம் ஆண்டு) அவரின் காலணிக்கு பண்பாட்டு ஆர்வலர்கள் குழு ஒன்று வந்துள்ளது. தனுஜா குமாரியின் எழுத்தைக் கண்ட அவர்கள், எழுத்தாளர் விஜிலாவிற்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். தனுஜா குமாரியின் அனுபவ குறிப்புகளை புத்தகமாக வெளியிடுவதில் ஊக்கப்படுத்தி இருக்கிறார் விஜிலா. அவரின் உதவியுடன் தனுஜா எழுதிய புத்தகத்தை 2014 ஆம் ஆண்டு தற்போதைய கேரள மாநில முதலமைச்சரான பினராயி விஜயன் வெளியிட்டார். இதையடுத்து, தனுஜா குமாரிக்கு அவரது குடும்பத்தினரும் அதிகளவில் ஆதரவைக் கொடுத்தனர்.

பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்ட நூல்

அந்தப் புத்தகம்,

செங்கல்சூலையில் என் வாழ்க்கை (chengalchoolayile ente jeevitham)

எனும் தலைப்பில் வெளியானது. தற்போது இந்த புத்தகம் இரு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக விளங்கும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில், எம்ஏ பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகவும், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பிஏ பாடத்திட்டத்தில் ஒருபகுதியாகவும் இந்நூல் வைக்கப்பட்டுள்ளது.

இதே கோழிக்கோடு பல்கலை-யில், பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபனின் புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. தனுஜா, தூய்மைப் பணியாளராக சேவை செய்யும் பகுதியில் உள்ள வீடுகளில் இந்துகோபனின் வீடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதையறிந்த இணையவாசிகள், சமூகவலைதளங்களில் தனுஜாவிற்கு தங்களின் பாராட்டுகளை நெஞ்சம் நிறைய தெரிவித்து வருகின்றனர்.

தனது முதல் புத்தகத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால், செங்கல்சூலை காலணியின் வரலாறு தொடர்பான புத்தகத்தையும் தற்போது எழுதி வருகிறாராம் தனுஜா. இதற்கிடையே சுதந்திர தினத்தன்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், தனுஜா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினரை ராஜ்பவனுக்கு விருந்தினர்களாக அழைத்தார்.

ஆளுநரைச் சந்திக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தனுஜா குமாரி “இதுபோன்ற தருணத்தை கனவிலும் எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.