சுரதா ட்விட்டர்
இலக்கியம்

‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே’-உலகிற்கு ஊக்கத்தை தந்த ஊன்றுகோல்; உவமைக் கவிஞர் சுரதா பிறந்தநாள்

பொதுவாக, இந்த உலகத்தில் பாதிப்பேர் குருவின் வழியைப் பின்பற்றிச் செல்வார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர், சுரதா. தவிர, மாற்றத்தை விதைத்தவர்.

Prakash J

உவமைக் கவிஞர் சுரதாவுக்கு பிறந்த நாள்

பிடித்தமாதிரி பெயர் வைத்துக்கொள்வதில் தப்பில்லை; ஆனால், அந்தப் பெயர் மற்றவர்களுக்குப் பிடிக்கும்வகையில் தக்கவைத்துக் கொள்வதுதான் சிறப்பானதாக இருக்கும். இப்படி, பெயரை மாற்றிக்கொண்டு உலகில் பிரபலமானவர்களில் ஒருவர்தான் உவமைக் கவிஞர் சுரதா. அவருக்கு இன்று (நவ.23) தாலாட்டு நாள்.

‘சுப்புரத்தினதாசன்’ என்ற தம் பெயரை சுருக்கியவர்

பாரதியின் மீது பற்றுவைத்து தனது சுப்புரத்தினம் என்ற பெயரை, எப்படி ’பாரதிதான்’ என்று வைத்துக்கொண்டாரோ, அதைப்போலவே பாரதிதாசனின் மேல்கொண்ட பற்றின் காரணமாக அவரது இயற்பெயரான சுப்புரத்தினத்தை, தனது பெயராக ’சுப்புரத்தினதாசன்’ என்று வைத்துக்கொண்டார். இப்படி பெயர் எழுதிக்கொண்டிருந்த அவர், ஓர் அஞ்சலட்டையின் இறுதியில் ’சுப்புரத்தினதாசன்’ என்ற தம் பெயரை எழுதுவதற்கு இடம்போதவில்லை என்று அதனைச் சுருக்கி சு.ர.தா. என்று எழுதினார். காலப்போக்கில் அவ்வாறே தம் பெயரை எழுதத் தொடங்கினார்.

மாற்றத்தை விதைத்த சுரதா!

பிறர் எழுதுவதில் குற்றம்கண்டுபிடித்து, குட்டிக்கொண்டிருந்த பல ஏகலைவன்கள் வாழ்ந்த இந்த உலகில், ‘எழுது.. எழுது.. எதையாவது எழுது; எப்போதும் எழுது’ என எல்லோருக்கும் ஊக்கமளித்தவர் சுரதா. பொதுவாக, இந்த உலகத்தில் பாதிப்பேர் குருவின் வழியைப் பின்பற்றிச் செல்வார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர், சுரதா. தவிர, மாற்றத்தை விதைத்தவர்.

பொதுவாக, ஒவ்வொரு கவிஞர்களுக்கும் வெவ்வேறு விதமான கற்பனைகள் தோன்றும்; அதைவைத்தே கவிதை புனைவார்கள். உதாரணத்திற்கு ’முயலை, தும்பைப்பூவுடன் வருணிப்பவர்களும் உண்டு; பஞ்சுடல் பசுங்கண் பாய்முயல்’ என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால், சுரதாவோ, முயலைக்கூட வித்தியாசமாக வர்ணித்தார். ஆம் அவர், ‘சலவை முயல்’ என்றார். இதில் எவ்வளவு பெரிய உவமை உள்ளது. இல்லையில்லை எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது, பாருங்கள். அதுதான் சுரதா.

"கவிதை என்பது வரப்பிரசாதமில்லை” - சுரதா

இந்தத் திறமையால்தான் சுரதா புதுப்புது உவமைகளைப் படைத்தார். ’பெருந்தீ மீதிலே ஈ மொய்ப்பதுண்டோ’ என்ற பழைய வரிகளை எடுத்து, அதற்கு இணையாகப் புதிய வரிகள் தந்தவர், சுரதா. ஆம், ’நீலவான் மீதிலே நிழல்படுவதுண்டோ’ என்று மாற்றி, பலரையும் வியக்கவைத்தார். இப்படி வித்தியாசமான முறையில் கவிதைகள் எழுதியவர், “கவிதை என்பது வரப்பிரசாதமில்லை. கற்றுக்கொண்டு உழைத்தால் வருவது” என்றார். அவரிடம் ஒருமுறை, "நீங்கள் எப்படிக் கவிதை எழுதுகிறீர்கள்" எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எதனையும் மாறுபட்ட பார்வையோடு நீண்ட நெடுங்காலம் நிலைத்து நிற்பனவற்றைக் கூறுவதற்கு என்னிடம் நிறையவே உள்ளன என்பதால் எழுதுகிறேன்” எனப் பதிலளித்தார்.

மூடநம்பிக்கைகளும், முட்டுக்கட்டைகளும் நிரம்பிய சமுதாயத்தில், இளமையிலேயே பகுத்தறிவுக் கொள்கைப் பற்றாளராக விளங்கிய சுரதா, தம்முடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு, ‘சாவின் முத்தம்’ எனப் பெயரிட்டு பலருக்கும் சாட்டையடி கொடுத்தார். அதுமட்டுமல்ல, அவர் எழுதிய கவிதைகள் எல்லாமே உலகுக்குச் சாட்டையடிக் கொடுக்கச் செய்ததன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

காட்டின் கொடைத் திறமையை ஏட்டில் கொட்டிய கவிஞர்

’தேன்’ குறித்து ஒரு கவிதையில்,

’பொங்கி வழிந்திடும்தேன் - அது

பூக்களின் வியர்வையடி’

- என்கிற ஒரு புது தத்துவத்தைத் தனது கவிதையில் புகுத்தினார்.

’ஏர்’ குறித்த இன்னொரு கவிதையில்,

‘ஈரத்தின் வரலாறே மேக மாகும்

ஏருழவின் வரலாறே வைய மாகும்’

- என ஏரின் நன்மையை உலகுக்கு உணரவைத்தார்.

அடுத்து, ‘காடு’ குறித்த ஒரு கவிதையில்,

‘காடு பொருள் கொடுக்கும்

காய்கனி ஈன்றெடுக்கும்

கூடிக் களித்திடவே - கிளியே

குளிர்ந்த நிழல்கொடுக்கும்’

forest

- என்ற காட்டின் கொடைத் திறமையை ஏட்டில் கொட்டித் தீர்த்தார்.

எந்தக் கவிஞருக்கும் எட்டாத கற்பனைவரிகள்!

’நீர்’ குறித்த ஒரு கவிதையில்,

‘வற்றாத மேகம் வாயைத் திறந்தால்

ஊசிபோல் மின்னல் உடனே தோன்றும்’

- என எந்தக் கவிஞருக்கும் எட்டாத கற்பனைவரியை, தன் கவிதையில் திணித்தார்.

rain

அதுபோல், ‘மழை’ குறித்த ஒரு கவிதையில்,

‘வீணையின் நரம்புபோல் வீழும் மழைநீர்

தாவரங் கட்கெல்லாம் தாய்ப் பாலாகும்’

- என மழைநீரின் நன்மையை, தாய்ப்பாலுக்கு இணையாகக் கொண்டுசென்றார்.

கண்கள் போடும் கணக்கை, காதலுடன் கணித்தவர்!

இப்படி, இயற்கைக்கே பல உவமைகளுடன் கவிதைகளை எழுதியவர் காதலையும் உவமையில் விட்டுவைக்கவில்லை. காதல் முதலில் தொடங்குவது கண்களில்தானே? இதையடுத்து, ‘கண்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை ஒன்றில்,

‘எண்களின் உதவி யாலே

எழுகின்ற கணிதம் போன்று

கண்களின் உறவில் தோன்றிக்

கனிவதே காதல்’

- என கண்கள் போடும் கணக்கை, காதலுடன் கணித்தவர், சுரதா மட்டும்தான்.

love

அதே கண்களைக் கொண்ட மற்றொரு கவிதையில்,

’எண்ணில் பிறப்பது கணக்கு; இருவர்

கண்ணிலும் நெஞ்சிலும் பிறப்பது காதல்’

- என்றார்.

குறளோடு மச்சத்தை ஒப்பிட்ட சுரதா

அதே சுரதா, ‘முகம்’ என்ற மற்றொரு கவிதையில்,

‘முகத்திற்கு முகவுரை முதிரா நெற்றியே

தலைக்கு முகவுரை தாமரை முகமே’

- என முகத்தைக்கூட முகவுரைக்கு நிகராக ஒப்பிடுகிறார். அதாவது, கட்டுரை ஒன்றில் முகவுரையே சிறப்பான தொடக்கத்தை ஆரம்பிக்கும். அதுபோன்று முகம் இருக்க வேண்டும் என்பதே கவிஞர் காட்டும் உவமை.

lips

காதலியின் உதடு குறித்த ஒரு கவிதையில்,

‘எப்போதும் உன்வாய் செவ்வாய்

எனக்குநீ என்றும் திங்கள்

இப்போதுன் சிரிப்பு வெள்ளி

இன்பந்தான் நமது பள்ளி’

- உதட்டில் ஆரம்பிக்கும் புன்னகையைக்கூட உற்சாகத்தோடு ஒப்பிட்டவர், சுரதா.

அதுபோல் ’மச்சம்’ குறித்த ஒரு கவிதையில்,

‘இறவாத புகழே சிறந்த எச்சமாம்

தானே தோன்றும் தழும்பே மச்சமாம்’

- இக்கவிதையில் திருவள்ளுரின், ‘தோன்றின் புகழொடு’ குறளோடு மச்சத்தை ஒப்பிட்டுள்ளார்.

பெண்ணுரிமை பெற ஏற்றம் கண்டவர்!

இப்படி, உதடு, மச்சம், கண் என அனைத்தையும் வர்ணிக்கும் கவிஞர் சுரதா, பெண்ணையும் கண்ணியமான வார்த்தைகளால் வர்ணித்திருப்பதுதான் இன்னும் சிறப்பு.

’பெண்’ குறித்த ஒரு கவிதையில்,

’அரும்பு சடங்கானால் அப்போது மலராம்

அழகி சடங்கானால் அப்போது மங்கையாம்’

- என மலரைக்கூட மங்கையோடு இணைத்து கவிதை தீட்டியுள்ளார்.

அதே பெண், தன்னுடைய உரிமையைப் பேண வேண்டும் என்பதில் கருத்து தெரிவிக்கும் கவிஞர், அதுகுறித்த கவிதை ஒன்றில்,

‘பெண்ணுரிமை பெறவேண்டும் விதவை யான

பெண்ணுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்

எண்ணுரிமை எழுத்துரிமை பெற்றுப் பெண்கள்

எல்லோரும் இந்நாட்டில் கற்க வேண்டும்’

- என தன் எழுத்துமூலம் எடுத்துக் காட்டி ஏற்றம்காண வைத்துள்ளார்.

பொருளாதாரம் பற்றி கவலைதெரிவித்த சுரதா

அடுத்து, பெண்களின் பெருமையைப் பேசும் ’கருப்பை’ குறித்த ஒரு கவிதையில்,

‘விவாகம் ஆகும் வரையிலது வெறும்பை

வெள்ளை வியர்வை விழுங்கினால் கருப்பை’

- என எளிய வார்த்தைகளின்மூலம் தாம்பத்ய வாழ்க்கையை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

இயற்கை, பெண், காதல் என எல்லாவற்றிலும் முத்திரை பதித்த கவிஞர் சுரதா, நாட்டின் பொருளாதாரம் பற்றியும் கவலை தெரிவித்தார்.

இதுகுறித்த கவிதை ஒன்றில்,

‘சரித்திரம் ஒவ்வோர் நாட்டின்

தழும்பாகும்; நாட்டை வாட்டும்

தரித்திரம் பொருளா தாரத்

தடுமாற்ற மாகும்’

- என எடுத்துரைத்தார்.

திரையிலும் உவமையை உதிர்த்த சுரதா

இப்படி எண்ணற்ற கவிதைகளில் மட்டுமின்றி சினிமா பாடல்களிலும் உவமையைப் புகுத்தியவர் சுரதா. தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியம், தமிழ், கவிதை சார்ந்து ஓயாது ஊக்கமுடன் இயங்கிக்கொண்டிருந்தவர் சுரதா. எம்ஜிஆரின் 'என் தங்கை’ திரைப்படத்திற்கு அவர் எழுதிய முதல் பாடலில்கூட, ’ஆடும் ஊஞ்சலைப்போலவே அலை ஆடுதே’ என்ற உவமையைத் திணித்து எம்ஜிஆரையே திகைக்கவைத்தார். அதுபோல் அடுத்தடுத்து அவர் எழுதிய ’அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’, ’ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே’, ’ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா’ உள்ளிட்ட பல பாடல்களிலும் உவமைகளைத் திணித்து திரையுலகிலும் உலா வந்தவர் சுரதா.

புதுமையைப் படைப்பதுதான் சுரதாவின் இயல்பு; அதன்படி, கவியரங்கம் என்று ஒருவகையை அறிமுகப்படுத்தி, அதில் பலவிதங்களில் நடத்திக்காட்டிச் சிறப்பித்தவர், சுரதா. அவர், அன்று தந்த ஊக்கம்தான் இன்றும் எல்லாக் கவிஞர்களுக்கும் உறக்கமில்லாத ஊக்கத்தைத் தந்துகொண்டிருக்கிறது.

ஊக்கத்தின் ஊன்றுகோலை உலகிற்கு விட்டுச் சென்ற சுரதா

இன்னும் சொல்லப்போனால், ’ஊக்கம்’ குறித்த ஒரு கவிதையில்,

‘ஊக்கத்தை நெஞ்சில் வைத்தும்

உழைப்பினை வாழ்வில் வைத்தும்

தூக்கத்தை விரட்டு வோர்க்குத்

தோல்வியே வருவ தில்லை’

- என ஊக்கத்தின் ஊன்றுகோலை உலகிற்கு விட்டுச் சென்றுள்ளார். அந்த ஊன்றுகோலின் வழியில்தான் இன்ற எண்ணற்ற இளையோர்களும் கவிஞர்களும் ஊக்கத்துடன் உலகில் உலா வருகின்றனர். அந்த ஊக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்த ஊன்றுகோலுக்கு இன்று மீண்டும் தாலாட்டு நாள் வாழ்த்துகள்.