குழந்தைப் பெயர்கள் Image by Claire51700 from Pixabay
இலக்கியம்

இளையோர் மொழிக்களம் | தங்கமணிக்கு என்ன பொருள் - 24 ?

அண்மைக் காலமாகக் குழந்தைகட்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டவேண்டும் என்ற ஆர்வம் பெருகியிருக்கிறது.

மகுடேசுவரன்

குழந்தைகட்குப் பெயர் வைப்பது தலையாய ஆராய்ச்சிக்குரிய வேலையாகத் தற்காலத்தில் மாறிவிட்டது. என்னுடைய முகநூல் உள்ளஞ்சல்வழி மிகுதியாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் இதுதான். ஒரு முன்னெழுத்தைக் கொடுத்து நல்ல பெயர்களாகப் பரிந்துரையுங்கள் என்பார்கள். ‘ஐயா எனக்கு மகள் பிறந்திருக்கிறாள். வே அல்லது வி என்ற எழுத்தில் தொடங்கும் நல்ல தமிழ்ப்பெயர்களைச் சொல்லுங்கள்’ என்று செய்தி வரும். தொடக்கத்தில் அவர்களின் வேண்டுகோளைத் தலைமேற்கொண்டு நேரமெடுத்து ஆராய்ந்து சில பெயர்களைச் சொன்னேன். தமிழ்ப்பெயர் என்பதாலோ என்னவோ அவர்கட்கு ஏதோ ஒன்று குறைவதாகப்படும். “இந்தப் பெயர் என் வீட்டார்க்குப் பிடிக்கவில்லை, வேறு நல்ல பெயர்களைக் கூறுங்கள்” என்பர். எடுத்த செயலை அவ்வளவு எளிதில் விடமுடியாதில்லையா ? மேலும் ஆராய்ந்து சில பெயர்களைக் கூறுவேன்.

இளையோர் மொழிக்களம்

இதற்கிடையில் காணுமிடமெல்லாம் கண்ணம்மாவின் தோற்றம்போல் என் நினைவெங்கும் வேலம்மா, வேல்விழி, விழியழகி, வியன்மலர் என்று பெண்பாற்பெயர்த்தொடர்களாக நிறைந்திருக்கும். “ஐயா அந்தப் பெயர்களும் யார்க்கும் பிடிக்கவில்லை. இன்னும் நல்ல பெயர்களாகச் சொல்லுங்கள், உங்களால் முடியும்” என்று என்னை ஊக்குவிக்கத் தொடங்குவர். நற்றமிழ்ப் பெயர்களைச் சொல்வதற்காக இறங்கிய முயற்சி இவ்வாறு என்னை ஊக்குவித்துத் தேற்றுவதில் முடியும். அதனாலேயே இத்தகைய வேண்டுகோள்களை மிகவும் அச்சத்தோடு அணுகுவதுண்டு. அதனையும் தாண்டி முதன்முயற்சியிலேயே நான் கூறிய பெயர்களை ஏற்றுக்கொண்டவர்கள், அப்பெயர்வழியே இன்னொரு பெயரை வருவித்துக்கொண்டவர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். என்னுடைய இணையச் செயல்பாட்டின்வழி ஆயிரக்கணக்கான குழந்தைகட்குத் தமிழ்ப்பெயர் சூட்டிவிட்டேன் என்பது நான் வெளியே கூறிக்கொள்ளாத நற்செயல்களில் ஒன்று. மேற்சொன்ன நிகழ்வுகளை நகைச்சுவைப் பூச்சோடு எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர குறையொன்றுமில்லை. அண்மைக் காலமாகக் குழந்தைகட்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டவேண்டும் என்ற ஆர்வம் பெருகியிருக்கிறது.

தமிழ்மொழி சார்ந்த விழிப்புணர்வினைத் தோற்றுவிப்பதில் நம் பெயர்களைப் பற்றிய அறிவை ஊட்டுவது மிகவும் இன்றியமையாதது. இந்தப் ‘பெயர்’ என்ற சொல்லே வெறும் பெயர் என்பதோடு நிற்பது மட்டுமன்று. பெயர்ச்சொல் என்பதுதான் அதன் முழுவடிவம். ஏனென்றால் பெயர் என்பது பருப்பொருள் இல்லை. பெயர் என்பது பொருளளவிலும் ஒரு சொல்தான். அதனால் பெயர்ச்சொல் என்பதுதான் முற்று முழுமையான வடிவம். சொல் என்பது என்ன ? பொருளைத் தருகின்ற மொழியொலிப்பு எதுவோ அதுவே சொல். எனில் பெயர்ச்சொல் என்பது என்ன ? பொருளைத் தருகின்ற மொழியொலிப்பு ஒன்றின் பெயராகவும் விளங்குவது. சுருக்கமாக நாம் என்ன தெரிந்துகொள்கிறோம் ? பெயர் என்பது மொழியின் ஒரு சொல் என்றும் அது ஒரு பொருளைத் தரவேண்டும் என்றும் தெளிவடைகிறோம். பொருளை உணர்த்தாத எதுவுமே பெயரில்லை. பெயர்ச்சொல்லுமில்லை.

நமக்கு இடப்பட்டுள்ள பெயர்கள் அதாவது நாம் சூடிக்கொண்டுள்ள பெயர்ச்சொற்களுக்கு உரிய பொருள்கள் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். நம்மில் யார்யார்க்கு அவரவருடைய பெயர்க்குப் பொருள் தெரியும் ? ’செல்வராஜ்’ என்று ஒரு பெயர் இருப்பதாகக் கொள்வோம். அதற்குச் ‘செல்வத்தின் அரசன்’ என்று பொருள். ‘செல்வராணி’ என்றால் செல்வத்தின் அரசி. ‘தங்கராஜ்’ என்றால் தங்கத்தின் அரசன். ‘தங்கமணி’ என்றால் ‘தங்கத்தின்கண் பதித்த மணி’ என்று பொருள். இளையராஜா என்ற பெயர்க்கு இளவரசன் என்று பொருள். இந்தப் பெயர்களின் பொருள் நமக்கு இயல்பாகவே தெரியும். இவ்வாறு பொருள்கொள்ளவேண்டும் என்பதனை மொழியிலக்கணம் உணர்த்துகின்றது.

மேற்சொன்ன பெயர்கள் நாம் பொருளறிந்துள்ள சொற்களால் ஆனவை. அதனால் நமக்குப் பொருள் விளங்குகிறது. அவ்வாறே எல்லாப் பெயர்ச்சொற்களுக்கும் நம்மால் பொருளறிய முடிகிறதா ? இல்லை. ரிஷ்வந்த், ரித்திகா என்று பெயர்வைக்கிறார்கள். இவற்றின் பொருள் தெரியவில்லை. தெரிந்துகொள்ளலாம் என்று முயன்றாலும் தென்படுவதில்லை. இவ்விடர்ப்பாடு ஏன் வருகிறது ? தமிழ்ச்சொற்களால் ஆன பெயரை வைத்தால் தமிழ்ச்சொற்களுக்கு உரிய பொருளின்வழி பெயர்த்தொடர்களின் பொருளை அறிந்துவிடலாம். தமிழல்லாத மொழிச்சொற்களால் பெயர்வைத்தால் அவற்றின் பொருளை அறிவது பெரும்பாடு. இத்தகைய பெயரைச் சூட்டிக்கொண்டவர்கள் தம் பெயரின் பொருளை அறியாமலே பயன்படுத்திக்கொண்டிருக்க நேரலாம்.

ஆட்பெயர்ச்சொற்களில் பெரும்பான்மையானவை வடமொழிச் சொற்களாக இருக்கின்றன. இது தமிழ்ச்சொல், இது வடசொல் என்று பிரித்தறியவும் நமக்குத் தெரிவதில்லை. பெயரிடும் பெரும்பான்மைப் போக்கு எப்படிச் செல்கிறதோ அவ்வழியேதான் மக்களும் செல்கின்றனர். இரவி என்ற பெயர்ச்சொல்லை முன்னொட்டி எண்ணற்ற பெயர்கள் உள்ளன. இரவி என்ற வடசொல்லுக்கு ஞாயிறு, சூரியன் என்று பொருள். இரவிச்சந்திரன் என்றால் ஞாயிறு திங்கள் என்பதுதான் பொருள். அதற்குச் சூரிய சந்திரன் என்ற பொருள்வராதா என்று கேட்டால் வரும்தான். ஆனால் அவ்விரண்டும் வடசொற்களே. வடமொழி என்பதால்தான் பொருள் தெரியவில்லை, தமிழாகவே இருந்தாலாவது பொருள் தெரிந்துவிடுகிறதா ? இளம்பரிதி என்றால் என்ன பொருள் ? இளம்பரிதி தூய தமிழ்ச்சொல்தான். இதற்கும் பலர்க்குப் பொருள் தெரியாது. பரிதி என்றாலும் ஞாயிறுதான். காலையில் எழுகின்ற இளஞாயிறுதான் இளம்பரிதி. ஆனால், பரிதி என்ற சொல்லின் பொருளைத் தமிழகராதியில் தேடினால் கண்டுபிடித்துவிடலாம். தமிழ்ச்சொல் என்றால் தேடியாவது பொருளை அடையலாம்.

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வுதான். நல்ல தமிழில் குழந்தைகட்குப் பெயர்சூட்டுவதுதான் அது. தமிழில் பெயர் சூட்டினால் அது தமிழையும் வளர்க்கும். அவரவர் பெயர்ப்பொருளும் தெரியவரும்.

முந்தைய பகுதிகள்

இளையோர் மொழிக்களம்