இலக்கியமும் அஞ்சலட்டையும் இலக்கியமும் அஞ்சலட்டையும்
இலக்கியம்

‘இலக்கியமும் அஞ்சலட்டையும்’ எழுத்தாளர்களுக்கு வெளியிடப்படும் அஞ்சலட்டைகள்

Angeshwar G

நவீன யுகத்தில் உலகம் சுருங்கி விட்டது. உலகின் எந்த மூலையில் இருந்தலும் குடும்பத்தினரின் முகத்தை பார்த்து மகிழும் வசதி கடந்த சில வருடங்களாகவே உள்ளது. 10 ஆண்டுகள் முன்பு வரை தொலைபேசிகள் மூலம் பேசும் வழக்கம் இருந்தது. அதனினும் 10 ஆண்டுகள் முன் கடிதப் போக்குவரத்து மட்டுமே நடைமுறையில் இருந்தது.

குடும்பத்தின் மகிழ்ச்சி, துக்கம், கண்ணீர், சிரிப்பு என அனைத்தையும் எழுத்துக்களே தாங்கிச் சென்றன. பல உலகத்தலைவர்களின் கடிதங்கள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. பல தலைவர்களது காதல் கடிதங்களும் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

கடிதப் பரிமாற்ற முறையை பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தாத சூழலில் உலக அஞ்சலட்டை தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் ‘இலக்கியமும் அஞ்சலட்டையும்’ என்ற தலைப்பில் 12 எழுத்தாளர்களின் அஞ்சலட்டைகளை வெளியிடுகின்றன. மெட்ராஸ் போஸ்ட் கார்ட் கம்யூன் உதவியுடன் போஸ்ட் கார்ட் ஒரிஜினல் இந்த அஞ்சலட்டைகளை வடிவமைத்துள்ளது.

நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை, பிரபஞ்சன், சு.ரா, பூமணி, வேல ராமமூர்த்தி, இந்திரன், கு.அழகிரிசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம், கி.ரா, ஜெயகாந்தன் போன்ற 12 எழுத்தாளர்களின் அஞ்சலட்டைகள் வெளியிடப்படுகின்றன.

சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் அக்டோபர் 1, 2023 அன்று மாலை 3.00 மணிக்கு அஞ்சல் அட்டைகளை வெளியிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் புத்தக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இது குறித்து போஸ்ட் கார்டு ஒரிஜினல்ஸ் நிறுவனர் மற்றும் வடிவமைப்பாளர் ஜெகதீஷ்வரனைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “கிரா மற்றும் கு.அழகிரி சாமிக்கு இந்தாண்டு நூற்றாண்டு பிறந்த நாள். இரு எழுத்தாளர்களையும் கொண்டாட வேண்டும் என ஆரம்பித்தது, அக்டோபர் 1 அன்று அஞ்சலட்டை தினமும் வருவதால் அதையும் கொண்டாட வேண்டும் இரண்டையும் சேர்த்து கொண்டாடலாம் என ஆரம்பித்தோம். இந்த இரண்டையும் தாண்டி POSTCARD TALES என்ற ஆவணப்படத்தையும் திரையிட உள்ளோம்.

ஜெகதீஷ்வரன்

டிஸ்கவரி புக் பேலஸை தொடர்பு கொண்ட போது, அவர்கள் கட்டாயம் பண்ணலாம் என்றனர். அதனை அடுத்து 12 எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களிடம் முறையான அனுமதி வாங்கி ஆரம்பிக்கப்பட்டது தான் இது. நாளை நடக்க இருக்கிறது.

அஞ்சலட்டைகளில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் எழுத்தாளர்களின் புகழ்பெற்ற புத்தகங்களாக இருக்கும். அட்டைகளில் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் அவர்களது அனைத்து புத்தகங்களிலும் உள்ளவற்றில் சிலவற்றை மேற்கோளாக காட்டப்பட்டிருக்கும்.

மேலும் இது முதல் தொகுப்பு தான். இன்னும் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான அஞ்சலட்டைகளை வெளியிட இருக்கிறோம். அடுத்து கவிஞர்களுக்கும் அஞ்சலட்டைகளை வெளியிட இருக்கிறோம்” என்றார்.