சக்கர வியூகம் 14 PT Web
இலக்கியம்

சக்கர வியூகம் 14 | அமானுல்லாவும் ஆர்ஜேவும்

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் 14-ம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.

சிவராமன் கணேசன்

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 14 - அமானுல்லாவும் ஆர்ஜேவும்

மறு நாள் ஷேக்கை பெலாசோவில் ஸ்வாமி சந்தித்தார். தன்னை சந்திக்கும் எல்லோரிடமும் ஆர் ஜே நிகழ்த்தும் மேஜிக்கை ஷேக்கிடமும் நிகழ்த்தியிருந்தார். சந்திப்பு முடிந்ததும், ஷேக் “சாமியார் என்றால் சீரியசாக ஆன்மிகம் பேசுபவர் மட்டுமே என்று நினைத்திருந்த எண்ணத்தில் இவர் மண்ணைப்போட்டார் மிருணாளினி. என் உயிர் போகுமளவு சிரித்து மீண்டிருக்கிறேன். இந்த மனிதரை அடிக்கடி சந்திக்கவேண்டும்” என்றார்.

‘போய் வந்தது உங்கள் உயிர் மட்டுமல்ல’ என்று நினைத்துக்கொண்டேன்.

“ஹேப்பி ஷேக்” என்றேன்.

அடுத்த ஆச்சயர்மாக 36 மணி நேரத்திற்கு ஸ்வாமி சொல்லி வைத்திருந்த ஏதோ இயற்கை மருத்துவ உணவு டயட் ஷேக்கிற்கு பிரமாதமாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. இளமையில் இருந்து துன்புறுத்தி வந்த வயிற்றுவலியை ஒன்றரை நாட்களில் ஸ்வாமியின் கைவேலை சரி செய்யத் தொடங்கியிருந்தது. தினமும் 30 நிமிடங்கள் ஸ்வாமிக்கு ஷேக் ஒதுக்கியிருந்தார்.

“என் கெளபீனத்தைக்கூட விடுவதில்லை மிருணாளினி, அத்தனையும் ஸ்கேன் செய்துதான் ஷேக்கின் அறைக்குள் அனுப்புகிறார்கள்” என்றார் வழக்கமான வெடிச்சிரிப்புடன்.

அவர் மருத்துவத்திற்கு தேவையான மூலிகைகளை ஷேக் அலுவலகமே கொல்லிமலையிலிருந்து கொள்முதல் செய்தது. அத்தனையும் தனிவிமானத்தில் வந்து இறங்கியது. ஸ்வாமிக்கு ஷேக் அரண்மனையில் நுழைய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

கொல்லிமலை

ஷேக்கிடம் ஒரு மணி நேர அப்பாயிண்ட்மெண்ட் என்பதுதான் மிக நீண்ட சந்திப்பாக இருந்திருக்கும் யாருக்குமே. ஆனால் காலையிலிருந்து பின்மதியம் வரைக்கும் ஷேக் – ஆர்ஜே சந்திப்புகள் நீண்டன.

ஷேக்கை ஐந்து நாள்கள் கழிந்த கான்ஃபரன்ஸ் காலில், 70 இன்ச் தொலைக்காட்சியில் பார்த்தபோது நானே அதிசயித்தேன். அது நாள் வரை இல்லாத ஏதோ ஒரு பொலிவு இருந்தது.

மருந்துகள் இல்லை, மாத்திரைகள் இல்லை. என்ன மாயமென்றும், மந்திரமென்றும் தெரியவில்லை. அவ்வளவு வேகமாக ஷேக்கின் நம்பிக்கை ஸ்வாமியின் மீது படிந்திருந்தது. ஒரு தனி மனிதரைப்பற்றி ஷேக் அப்படி சிலாகித்துப்பேசி நான் கேட்டதே இல்லை. இருவரும் ஏதோ சிறுவயதிலிருந்து பழகிய நண்பர்கள் போல சிரித்துச் சிரித்துப் பேசுவதைப்பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

நண்பர்கள்

காலையில் ஷேக் அப்பாயிண்ட்மெண்ட், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு என்று ஸ்வாமியின் நாள்கள் இறுக்கமாக அமைந்திருந்தன. என் வீட்டில் தங்கியிருந்தார் என்ற மகிழ்வு அடியோடு போயிருந்தது. எப்படியேனும் இந்த வாரத்திற்குள் என மனவிழைவை அவரிடம் சொல்லிவிடவேண்டும் எனக்காத்திருந்தேன்.