சக்கர வியூகம் 10 புதிய தலைமுறை
இலக்கியம்

சக்கர வியூகம் 10 | மலர்வு

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் பத்தாம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.

சிவராமன் கணேசன்

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 10 - மலர்வு

மெல்லிய முறுவலுடன் கீதையின் அர்ஜூன விஷாத யோகத்தை தன் மொழியாளுமையால் மெல்ல மனங்களின் மேல் பரவவிட்டுக்கொண்டிருந்தார். அவர் முகத்தையன்றி வேறொன்றையும் அந்தக்கணத்தில் அறிந்திருக்கிலேன்.

நான் தற்கொலை முடிவு செய்து அவரைப்பார்த்த முதல் சந்திப்பிற்கும், இன்றைக்கும் கிட்டத்தட்ட 13 வருட இடைவெளி. ஆனால் அப்போது பார்த்த பார்த்த அதே தோற்றம், அதே முறுவல், அதே நம்பிக்கை ததும்பும் பேச்சு, அதே வாழ்க்கை முறை.

முற்றும் துறந்தவர், கிஞ்சித்தும் எந்த ஆசைகளும் இல்லை, பார்க்கும் யாவருக்கும் தன்னம்பிக்கையும், வாழ்வின் அர்த்தத்தையும் போதிக்கும் மொழி, பல நாடுகள், பல அரசுகள், பெரிய பெரிய தலைகள் என்று எவ்வளவோ தொடர்புகள் இருந்தும், தினசரி உணவையே யாசித்துதான் வாங்கிக்கொள்வார். எந்தப்பொருளாதார உதவியையும் கோரவும் மாட்டார், கொடுப்பதைப்பெறவும் மாட்டார்.

ஆர்ஜே என்ற சன்னியாசியின் சிஷ்யையாகிய அகந்தை மட்டும் என்னுள் பெருகிக்கொண்டே இருந்தது, அத்தோடு அவர் மீதான காதலும். இவ்வளவு உயரங்கள் தாண்டி வந்தும், அவர் எனக்களித்த அந்த முதல் நாள் அட்வைஸை மறக்கவே இல்லை. காதல்தான் உன் வாழ்வின் சத்ரு என்று சொன்னதை வேதவாக்கியமாக எடுத்துக்கொண்டேன். உயரம் பெருகபெருக என் வாழ்வில் காதலுக்கான சாத்தியங்களும் பெருகிக்கொண்டேதான் இருந்தன.

என்னப்பார்த்த முதல் சந்திப்பிலேயே காதல், காமம், படுக்கை என பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்த பல கோடீஸ்வரர்களையும் இடக்கையினால் நிராகரித்துக் கடந்து வந்தேன். கர்மயோகம் என்ற ஒன்றுதான் என் முதன்மை நோக்கமாக இருந்தது. ஒரு 75,000 ரியால்களில்2 என் வாழ்வையே முடித்து வைக்க இருந்த அந்த நொடியை நான் இன்று வரை மறக்கவேயில்லை.

அனுதினமும் அவரை மட்டுமே முழுமுதல் குருவாக தரிசித்து, அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுத்தெளிந்து, எவ்வளவோ தடைகளை நிவர்த்தி செய்து கொடுக்கும் தெய்வமாக அவரை உருவேற்றி வைத்திருந்த நாட்களிலிருந்து, இப்போது மெல்ல அதற்கடுத்த நிலையில் மேலேறி அவர் மீது கொண்டிருக்கும் இந்தப்பித்து நிலையை காதல் என்று சொல்லி அழைக்கவே பிரியப்படுகிறேன்.

அதீத பக்தியை காதலென்று குழப்பிக்கொள்கிறேனோ என்கிற உள்மனக் குரல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துக்கொண்டே இருக்கிறேன். என் வாழ்வை அவரன்றி வேறு யாராலும் இவ்வளவு ஏற்றப்படுத்தியிருக்க முடியாது என்ற நன்றி மட்டுமல்ல, நான் பார்த்த ஆண்களிலேயே பெரும் கம்பீரம் கொண்டவர் அவர் மட்டுமே என்று முடிவுக்கு வந்திருந்தேன்.

பெரும் பணம் சேர்த்தாயிற்று, புகழுக்குக் குறைவில்லை, ஏற்றத்தின் எல்லை வரை வந்திருக்கிறேன் இனி சொச்ச நாளில் இவற்றை தக்கவைக்கத்தான் போராடவேண்டும். இந்த மிட்லைஃப் கிரிஸிஸில் மாட்டிக்கொண்டு விழிக்கும் எனக்கு, அவரின் ஆன்மிகமும், குரலும்தான் ஒரு நாளின் பெரிய இளைப்பாறல். சமீப நாட்களில், அவரையே என் வாழ்வின் மொத்த இளைப்பாறலுக்கான குடிலாக மாற்றிக் கொண்டாலென்ன என்ற கேள்வியே மேலெழுந்து வருகிறது.

அவரின் எதிர்வினைகளை யோசித்து வைத்திருக்கிறேன். நிச்சயம் மறுப்பார். ஆனால் கோபப்படமாட்டார். அவரின் நியாயத்தை கேட்கத்தான் போகிறேன். என் நாவன்மை அவரை விடவும் சிறந்ததல்ல, ஆனால் அவரை ஆட்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை என்னை விட்டு விலகவில்லை.

இந்தமுறைதான் ஒரு நீண்ட பயணத்திற்காக இங்கு வந்திருக்கிறார். 18 நாள்கள் மஹாபாரத விரிவுரை இங்கு தங்கியிருப்பார். தினமும் அவரை சந்திக்கலாம், அவரின் அருகாமை தரும் பாதுகாப்பும், மகிழ்வும் வேறு எந்த விஷயமும் கொடுத்திராத மகிழ்வைத்தரும் உன்னதங்கள்.

உரை முடிந்து எழுந்தவரின் காலில் நமஸ்கரித்தேன். புன்முறுவலுடன் முன் நெற்றியைத்தொட்டார்.

”உன் மீது கடும் உடல் சூட்டை உணர்கிறேன். உனக்குத்தேவை உடனே ஒரு குளிர் நாட்டு வெகேஷன்” என்றார் புன்முறுவலோடு

“என் அரை மணி நேர வெகேஷன் சற்று முன்பு முடிந்தது ஸ்வாமி”

“ஹாஹாஹா, அதை இன்னும் அரை மணி நேரம் ஒத்திப்போடு, கொஞ்சம் பேசவேண்டும்”

“இந்த ஆயுளைக்கேளுங்கள், தருகிறேன்”

“முழுமையும் வேண்டாமென்றாலும், ஓரளவுக்கு தேவையானதை எடுத்துக்கொள்கிறேன்” என்று வெடித்துச்சிரித்தார்.

நான் சொன்னதன் உள்ளார்த்தமான பொருளை அவருக்கு எப்படியும் கடத்தி விட வேண்டும் என்று எனக்குள் தீர்மானித்தேன். இதோ இத்தனை வருடங்களில் இன்றுதான் என் நேரத்தைக்கோரி என்னை காத்திருக்கச் சொல்லியிருக்கிறார். எனக்கான நேரம் வந்துவிட்டதாகவே உணர்கிறேன்.

நாளின் எஞ்சிய மீட்டிங்கள் அனைத்தையும் கேன்சல் செய்து அவருக்காக காத்திருக்கிறேன்.

ஆசிகள் முடிந்து வந்தார். ஒரு யானையை நிகர்த்த நடை அவருக்கு. மெல்லதான் நடப்பார், பதட்டமோ, படபடப்போ இன்று தன்னை சுற்றி நிகழும் யாவற்றையும் புன்னைகையோடு அப்செர்வ் செய்யும் அவரின் செய்கையினை எப்போதும் ரசிப்பேன். மிகக்குறிப்பாக குழந்தைகள் கடந்து செல்லும்போதெல்லாம் நின்று கைகுலுக்கிவிட்டே செல்வார்.

”உன் பிசியான நேரத்தை எனக்காக எடுத்துக்கொண்டமைக்காக மன்னிப்புகள் மிருணாளினி” என்றார் ஆங்கிலத்தில்.

“உங்களை விட வேறேதும் எப்போதும் எனக்கு முக்கியமில்லை ஸ்வாமி” என்றேன். கண்கள் விரியப்புன்னகைத்தார்.

bentley bentayga 2021

”புது வண்டியோ” என்றார் காரில் ஏறிக்கொண்டே.

“ஆமாம் ஸ்வாமி, பெண்ட்லி பெண்டாக்யா, 2021 மாடல்”

“நல்ல ஒரு குதிரைச்சவாரி போலதான் இருக்கிறது” என்றார் ஒரு குழந்தைக்கே உரிய குதூகலத்துடன் நகர்ந்து நகர்ந்து இருக்கையில் அமர்ந்தவாறே.

”அப்புறம் நான் இந்த முறை இந்த உரை முடியும் வரைக்கும் உன் வீட்டில் தங்கிக்கொள்ளலாமில்லையா? முன் அனுமதி கேட்காமல் நானே முடிவு செய்துவிட்டேனே” என்றார்

ஒற்றை வாக்கியத்தோடு கடந்து முடிகிற மகிழ்வல்ல அது. வியப்பும், பூரிப்பும், கொண்டாட்டமும் நிறைந்த மகிழ்வும். இதைத்தான் எல்லாம் கூடிவருவதென்கிறார்களா?

“ஸ்வாமி, அதை விட பாக்கியம் எனக்கேதுமில்லை” என்றேன் மிக்க மகிழ்வோடு.

”ஏன் உன் முகம் வாட்டமாக இருக்கிறது, என்னிடம் சொல்லலாம் ஏதாவது யோசித்துக் கொண்டிருக்கிறாயா” என்றார்

சற்றே தடுமாறி “இல்லை ஸ்வாமி, வேலை அழுத்தம், ஏகப்பட்ட மீட்டிங்களினூடே கிளம்பி வந்தேன், அதுதான் லேசாகத் தலைவலி” என்றேன்

”புறங்கையை சீட்டுக்கு மேல விரித்து வைத்தாற்போல வைத்துக்கொண்டு, தலையை சீட்டின் பின்னால் சாய்த்து கண்களை மூடிக்கொள்” என்றார் ஒரு சிறிய ஆணை போல.

எனக்கும் இந்த நிமிடத்தில் அது வேண்டியிருந்தது. கண்களை மூடி புறங்கையை பேனட்டில் வைத்தேன். ஒரு பென்சிலோ, பேனாவோ ஏதோ ஒன்றை வைத்து, கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே வளைவாக ஒரு கோடு போட்டதைப்போல சட்டென்று ஒரு இழுப்பு இழுத்தார். அந்த இடத்தின் நரம்பின் முடிச்சு தலையைத் தொட்டு சிவப்பு நிற பட்டாம்பூச்சிகளை கண்ணுக்குள் பறக்கவிட்டது. அவை பறந்து மெல்லிய சிடுக்குகளால் சூழ்ந்திருந்த தலையை அவற்றிடமிருந்து விடுவித்து என்னிடம் தந்தன.

கண்களைத் திறந்தபோது அத்தனை நேரம் வருத்திக் கொண்டிருந்த தலைவலி காணாமலே போயிருந்தது. மெல்லிய உற்சாகம் ஒன்று மனதிலும், உடலிலும் வந்திருந்ததை உணர முடிந்தது. ”ஒரு காஃபி குடி, சற்று நேரத்தில் முழுமையாகச் சரியாகிவிடும்” என்றார்.

”உன்னிடம் இன்னும் என் விண்ணப்பம் ஒன்று கூட உண்டு மிருணாளினி, இந்த சொற்பொழிவெல்லாம் கூட அதற்கான இரண்டாம் கட்ட ஏற்பாடுதான். எனக்கு உங்கள் ஷேக்கை சந்திக்கவேண்டும். உன்னால் ஏற்பாடு செய்ய இயலுமா?” என்றார்.