Yoga File image | Freepik
லைஃப்ஸ்டைல்

International Day of Yoga | அன்றாடம் யோகா செய்வது ஏன் முக்கியம்?

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ஜெ.நிவேதா

இதன் பின்னணி என்ன? யோகா எந்த வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது என்று நமக்கு சொல்கிறார், யோகா பயிற்சி நிபுணர் பத்ம பிரியதர்ஷினி.

“இன்றைய பரபரப்பான அவசர காலகட்டத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது மிக மிக கவனிக்கப்பட வேண்டிய தேவையாக உள்ளது. எல்லாவற்றிலும் ஒரு அவசரமும் பதற்றமும் இருக்கும் நிலையில், நம்மால் நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தினை திறம்பட கையாள முடியாமல் போகிறது. ஆனால் அவற்றை காப்பதன்மூலம் மட்டுமே, நாம் அன்றாட வாழ்க்கையினை திறம்பட வாழ முடியும்.

Yoga

மனித மனதின் ஆரோக்கியம் என்பதற்கு சிறந்த வழி யோகா. யோகா தியானப் பயிற்சியின் மூலம் நம் உடல் மற்றும் மனதினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒரு நெறிமுறையான வாழ்க்கையினை நம்மால் வாழ முடியும்.

யோகாவில் உடலுக்கு, மூச்சுக்கு, மனதுக்கு, வாழ்க்கை ஒழுக்கத்துக்கு, ஞானத்துக்கு என்று நிறைய பயிற்சிகள் உள்ளன. அதிகாலையில் தினமும் உடலை அசைக்காமல் யோகா செய்வதன் மூலம், அன்றைய நாளுக்கான புத்துணர்ச்சியை நாம் பெறலாம். சரியான மூச்சுப்பயிற்சியால் மனமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆசனங்களால் முழு உடலும் தயாராகி, அன்றைய தினம் எதற்கும் ‘முடியும் முடியும்’ என்று சொல்லும்.

மனதில் வேலை செய்யக்கூடிய ஒரு பயிற்சி முறைதான் யோகா. ஒருவருக்கு மனம் சரியாக இருந்து விட்டால், எதையும் சரிசெய்து கொள்ளலாம். அது சரியில்லை என்றால், எது இருந்தும் பயனில்லை. யோகா மூலம் மன அமைதி ஏற்படும்போது, எண்ணங்கள் ஒருமுகப்படும். சுயத்தையும் சுற்றத்தையும் சரியாகப் பார்க்கத் தொடங்கலாம். எங்கும் பரவிக் கிடக்கும் கோபத் தணல் சற்றே குறையத் தொடங்கும்.

யோகா பயிற்சி நிபுணர் பத்ம பிரியதர்ஷினி.

யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும்.

முறையாக ஆலோசனை பெற்று அன்றாடம் யோகா செய்துவந்தால் இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம். உடலில் ரத்தத்தில் தேவையற்ற, கெட்ட கொழுப்பை அண்டவிடாமல் செய்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

யோகா என்பது உடலை, மனதை ஒருங்கிணைத்து, தன்கட்டுப்பாட்டில் வைத்து, உடல் மீது மனம் முழுமையாக ஆளுமை கொள்ள வழிசெய்கிறது. அத்துடன் தொடர்ச்சியான யோகாசனப் பயிற்சிகளின் காரணமாக உடலில் முறுக்குதன்மை (Stiffness) அறவே நீக்கப்பட்டு, நல்ல வளைந்து கொடுக்கும்தன்மை (Flexibility) அதிகரிக்கிறது. முக்கியமாக முதுகு எலும்புகளின் தண்டுவடம், அனைத்து எலும்புகளின் இணையும் இடங்கள், தசைகள் நீட்டிச்சுருங்கி, வலுவடைந்து, உடலில் எந்தவிதமான வலிகள், வேதனைகளும் இல்லாமல் வாழ உதவுகிறது.

Yoga

பிராணாயாமத்தின் காரணமாக நுரையீரல் பலப்பட்டு அதிக ஆக்சிஜன் பெறப்பட்டு மூச்சுசீராக, சிறப்பாக, அதிக பலத்தோடு செயல்படுகிறது. இதயம் பலமடைந்து, உடலின் அனைத்து நரம்பு மண்டலங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறது. கர்ப்பத்தின் போது பெண்கள் உடல் ஆரோக்கியத்துக்கு கட்டாயம் யோகா செய்ய வேண்டும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ரத்த சோகை, முதுகு வலி, கால் வலி, செரிமானம் கெடுதல் போன்றவை சீரடையும். யோகா செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டியது, கட்டாயம்”