K L Rahul File image
Cricket

தோனி, ரோகித், கோலி ஆகியோரின் ஸ்பெஷல் என்ன? மனம் திறந்த கே.எல்.ராகுல்

Jagadeesh Rg

தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் தலைமையில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல், அவர்களின் தனித்துவங்களைப்பற்றி தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார் கே.எல்.ராகுல். மேலும் சில போட்டிகளில் அவர் சிறப்பாகவே விளையாடினார். அப்படிப்பட்ட நேரத்தில்தான் ஆடத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் இருந்தும் எதிர் வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இடம்பெற முடியாத சூழல் உருவானது. எனினும் ‘விரைவில் நான் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவேன்’ என ராகுல் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் "தி ரன்வீர் ஷோ" என்ற நிகழ்ச்சியில் தோனியை பற்றி பேசிய ராகுல் "தோனி தான் என்னுடைய முதல் கேப்டன். நான் கிரிக்கெட் குறித்து பல விஷயங்களை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். மிக முக்கியமாக நெருக்கடியான நேரங்களில் களத்தில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்.

MS Dhoni

மேலும் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களுடனும் தோனி நல்லுறவை வைத்துக் கொள்வார். இதன் மூலம் தோனிக்காக மற்ற வீரர்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள். அவர் கூடவே அனைவரும் இருப்பார்கள். இந்த விஷயத்தை நான் தோனியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்” என்றுள்ளார்.

பின் விராட் கோலி குறித்து பேசுகையில், "விராட் கோலி தலைமையில் 6 முதல் 7 ஆண்டுகள் வரை இந்திய அணி இருந்தது. விராட் கோலியை பொறுத்தவரை ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தரம் அவரால் மேன்மை அடைந்தது.

Virat Kohli

கிரிக்கெட் மீதான பற்று, வெறி, அணியை முன்னின்று வழி நடத்துவது, எப்படி சாதிப்பது என்பதெல்லாம் எனக்கு கோலியிடம் மிகவும் பிடித்த விஷயங்களாகும். ஒரு கிரிக்கெட் வீரர் உடல்நலத்தை எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும், சாப்பாட்டு விஷயத்தில் எவ்வளவு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் விராட் கோலியை பார்த்துதான் நான் கற்றுக் கொண்டேன்" என்றுள்ளார்.

இறுதியாக ரோகித் சர்மா குறித்து பேசிய அவர் "ரோகித் சர்மா கேப்டனாகவும் தலைவராகவும் அறிவு கூர்மையுடன் இருப்பவர். ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே யோசித்து அதற்கு ஓர் வடிவம் கொடுப்பார்.

Rohit sharma

ஒவ்வொரு வீரரின் பலம் என்ன என்பது குறித்து ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும். தன் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் ஆட்ட நுணுக்கத்தையும் ரோகித் சர்மா அறிந்து கொள்வார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் அவர் தீட்டும் திட்டம் தனித்துவமிக்கதாக இருக்கும்" என்றுள்ளார்.