சொமாட்டோ சிஇஓ முகநூல்
இந்தியா

டெலிவரி ஊழியராக மாறிய சொமாட்டோ சிஇஓ... லிஃப்ட் வழியே செல்ல மறுப்பு தெரிவித்த மால்!

டெலிவரி ஊழியராக மாறிய சொமாட்டோ சிஇஓ, “மனிதநேயத்தோடு நடத்த வேண்டும்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் மற்ற டெலிவரி ஊழியர்களை போல தானும் களத்தில் இறங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், சோமோட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்திர் கோயல் தனது மனைவி ஜியா கோயலுடன் இணைந்து சோமேட்டோ நிறுவனத்தின் டீசர்ட்டை அணிந்தபடி, பைக்கில் சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

“சில நாட்களுக்கு முன் நானும் என் மனைவியும் உணவு டெலிவரியில் ஈடுபட்டோம்” என்று தீபிந்திர் கோயல் இன்ஸ்டாவில் பதிவிட்டதை அடுத்து பலரும் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதில், சிலர் ‘பெரிய நிறுவனத்தின் சிஇஓ இவ்வாறு செயல்படுவது ஆச்சர்யம் தருகிறது. அவரது பணிவு போற்றத்தக்கது’ என்று தெரிவித்தாலும், மற்றும் சிலர் இது வியாபார யுக்தி என்று பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், தீபிந்திர் கோயல் புகைப்படம் மட்டுமன்றி வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதில் உணவு டெலிவரி பாட்னர்களுக்கு பல இடங்களில் அனுமதியும், மரியாதையும் மறுக்கப்படுவதை குறிப்பிட்டிருக்கிறார்.

தன் பதிவில் அவர், “ஹல்திராம் என்பவரின் ஆர்டரை பெறுவதற்காக குர்கானில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்கு நாங்கள் சென்றோம் (கோயல் மற்றும் அவரது மனைவி). ஆனால், அங்கிருந்தவர்கள் (security guard) எங்களை மற்றொரு நுழைவு வாயிலில் வரும்படி கூறினார்கள். அப்போதுதான் உணர்ந்தேன், எங்களை செல்ல சொன்ன வழியில் லிப்ட் எதுவும் இல்லை. படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டியிருந்தது.

சரியென நாங்களும் ஆர்டரை பெறுவதற்கு மூன்றாவது மாடிக்கு படிக்கட்டு வழியே சென்றோம். அங்கே எங்கள் நிறுவனத்தின் இன்னும் சில டெலிவரி பார்ட்னர்களும் இருந்தனர். அவர்களிடம் விசாரிக்கையில், மாலுக்குள் எங்களால் (டெலிவரி பாட்னர்களால்) நுழைய முடியாது என்றும், ஆர்டர்களைப்பெற படிக்கட்டுகளில் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிந்தது. இதுபற்றி எனது சக டெலிவரி பார்ட்னர்களிடம் கலந்துரையாடினேன். சிறிது நேரத்திற்குப் பின் இறுதியாக எனது டெலிவரியையும் வாங்கினேன்.

தொடர்ந்து, எனது இரண்டாவது ஆர்டரைப் பெற்றேன். அப்போது, அனைத்து டெலிவரி பார்ட்னர்களின் வேலை நிலைமையை மேம்படுத்த மால்களுடன் நாங்கள் இன்னும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும், மால்களும் டெலிவரி பார்ட்னர்களிடம் அதிக மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். உடன், ‘இதுபற்றி உங்கள் கருத்து என்ன?’ என்றும் கேட்டுள்ளார்.

இவரது இந்தப் பதிவின்கீழ், “உணவு டெலிவரி செய்பவர்களுக்கு அவர்களுக்கான மரியாதை கொடுக்கப்படவேண்டும். மனிதர்களிடையே எதற்கு இந்த பிரிவினை? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று பலர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.