இந்தியா

‘இந்தியாவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம்’ - ஜிபோ சிஇஓ ராஜ் பிரகாஷ்

‘இந்தியாவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம்’ - ஜிபோ சிஇஓ ராஜ் பிரகாஷ்

webteam

ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கம்போல மும்பை, டெல்லியில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வரிசையில் தமிழத்திலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மக்களிடையே அச்சம் எழுவது இயல்பானதுதான். இந்த நிலையில் சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் பார்மா ஆராய்ச்சி நிறுவனமான ஜிபோ ஆர்என்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜ் பிரகாஷ் உரையாடியபோது, நம்பிக்கை அளிக்கும் சில வார்த்தைகளைத் தெரிவித்தார்.

’’ஒருநாளில் பதிவாகும் பாதிப்புகளில் 80 சதவீதத்துக்கு மேல் ஒமைக்ரான் என்றால் புதிய அலை உருவாகிவிட்டது என்பதை புரிந்துகொள்ளலாம். மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் இவை உருவாகிவிட்டது. அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவை விட நான்கு மடங்கு சிறிய நாட்டில் ஒருநாளில் 10 லட்சம் நபர்களுக்கு பாதிப்பு என்றால், இந்தியாவில் அதிகபட்சம் 40 லட்சம் நபர்களுக்கு ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே இருமுறை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது.

மற்ற வகைகளைவிட வேகமாக பரவும் அதே சமயத்தில் இந்த சுழற்சியும் வேகமாக முடியலாம். டெல்டா டெஸ்ட் மேட்ச் போல இருந்தால், ஒமைக்ரான் டி20போல முடியலாம். பலருக்கும் பாதிப்பு ஏற்படுவதன் மூலம் விரைவாக இந்த அலை ஒயலாம். தென் ஆப்ரிக்காவில் இந்த அலை உச்சத்தை தொட்டு தற்போது சரிந்து வருகிறது’’ என்று ராஜ் பிரகாஷ் கூறினார்.

கொரோனா முதல் அலை வந்தபோது முன்கூட்டியே அவரது (ஜிபோ) அலுவலகத்துக்கு விடுமுறை அளிக்கபட்டது. அதேபோல முதல் அலை முடியப்போகிறது என்னும்போதே பணியாளர்களை வரவைத்தனர். இதேபோல இரண்டாம் அலை தொடங்கும் போது வீட்டில் இருந்து வேலை என்பதை ஊக்குவித்தனர். தற்போது புதிய அலை தொடங்குவதுபோல தெரிகிறது. வீட்டில் இருந்து வேலை தொடர்பாக உங்களது திட்டம் என்ன என்று கேட்டறிந்தோம்.

அதற்கு, ''இப்போதைக்கு அலுவலகம் வருகிறோம். நாங்கள் பார்ப்பது மருத்துவமனை நிலவரத்தை பொறுத்துதான். அதனை அடிப்படையாக கொண்டுதான் வீட்டில் இருந்து வேலை என்பது குறித்து யோசிப்போம். ஒமைக்ரானை பொறுத்தவரை பெரிய பாதிப்பு இல்லை. வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். கடந்த முறை ஏற்பட்டதைபோல ஆக்சிஜன் பற்றாக்குறை எங்கும் பதிவாகவில்லை. அதனால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று கணிக்கிறோம்.

இந்த சமயத்தில் மருத்துவமனைகளை அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. உண்மையிலே தேவைப்படும் நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதனை அரசும் மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். அப்போது நாம் பெரும் அசம்பாவிதத்தை தடுக்க முடியும். இல்லையெனில் அவசிய சிகிச்சை தேவைப்படுபவர்கள் வெளியில் காத்திருப்பார்கள், தேவையில்லாதவர்கள் மருத்துவமனையில் இருப்பார்கள். மருத்துவனையில் கட்டுப்படுத்த முடியாத சூழல் இருக்குமேயானால் அப்போது வீட்டில் இருந்து வேலையை பரிசீலனை செய்வோம்.

டெல்டாவை விட இதில் உயிர் இழப்புகள் மிகவும் குறைவு. உதாரணத்துக்கு டெல்டா மூலம் 10 நபர்கள் இறந்தால், ஒமைக்ரான் மூலம் மூவர் மட்டுமே இறக்கிறார்கள் என்பதால் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. ஆனால் அதற்காக இதனை natural vaccine என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் இதெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. அதேபோல குறுகிய காலத்தில் வேகமாக பரவுவதால் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் போடுவதும் சாத்தியமில்லை. இந்த வேரியண்ட் நம்மை கடந்து செல்லும். இன்னும் சில வாரங்களில் உச்சத்தை அடையும் இந்த ஒமைக்ரான் திரிபு, அதாவது மூன்றாம் அலை மார்ச் 15-ம் தேதிக்குள் முடியும் என நம்புகிறோம். டெல்டாவை போல அதிக பாதிப்பு இல்லை என்பதால் அலட்சியமாக இருக்கலாம் என கருத வேண்டாம்’’ என ராஜ்பிரகாஷ் தெரிவித்தார்.