இந்தியா

'இந்தியா பொருளாதார மந்தநிலைக்கு செல்ல வாய்ப்பே இல்லை' - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

'இந்தியா பொருளாதார மந்தநிலைக்கு செல்ல வாய்ப்பே இல்லை' - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

webteam

இந்தியா பொருளாதார மந்தநிலைக்குச் செல்ல பூஜ்யமளவிற்கு கூட வாய்ப்பில்லை என்றும் மாறாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டு இலக்கங்களில் வளர்ச்சி காணும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நுகர்வு அதிகரிப்பு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தை இரண்டு இலக்க வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் பொருளதாரம் நல்ல நிலையில் இருக்கிறது. நாம் உண்மையின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக திகழ்கிறோம். எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த பிறகு, வரி வருவாய் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் அதன் நிதி நிலைமையை மதிப்பீடு செய்து, இலவசங்களை வழங்குவதற்கு முன் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

முன்னதாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டின் (2022-23) முதல் காலாண்டில் 13.5 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்ற நிதியாண்டின் (2021-22) முதல் காலாண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 20.1 சதவிகிதமாக இருந்ததும் கவனிக்கத்தக்கது.