ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஓர் ஆண்டு ஆட்சி நிறைவை, அக்கட்சி அமைச்சர் தனிமனித இடைவெளியின்றி கொண்டாடியுள்ளார்.
ஆந்திராவில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் போட்டியிட்டு 151 இடங்களை கைப்பற்றியது. இதனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அத்துடன் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் அக்கட்சி முதலாம் ஆண்டு ஆட்சியை நிறைவுசெய்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதனை அக்கட்சியைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் முட்டசம்செட்டி ஸ்ரீநிவாச ராவ் நேற்று கேக் வெட்டி கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் விசாகப்பட்டினம் எம்பி எம்விவி சத்யநாராயணா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது அனைவரும் ஒன்றாக கூடி, எப்போதும் போல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நெருக்கடியான சூழல் உருவாகியது. துளி அளவும் சமூக இடைவெளி இல்லாத இந்த கொண்டாட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.