ரியாகா கிருஷ்ணய்யா, ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளம்
இந்தியா

ஆந்திரா|மீண்டும் ஒரு மாநிலங்களவை எம்பி ராஜினாமா.. ஜெகனுக்கு தொடர்ந்து பின்னடைவு!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ரியாகா கிருஷ்ணய்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Prakash J

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு தொடர் சரிவை கண்டு வருகிறது. அக்கட்சியில் இருந்தவர்கள் விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்பிக்களான மோபிதேவி வெங்கடரமணாவின் பதவிக்காலம் ஜூன் 2026 வரையிலும், பேடா மஸ்தான் ராவ் பதவிக்காலம் ஜூன் 2028 வரையிலும் இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் தங்களது பதவியை கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில், அக்கட்சியின் மற்றொரு மாநிலங்களவை எம்.பி. ரியாகா கிருஷ்ணய்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரியாகா கிருஷ்ணய்யா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரை நேரடியாகச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

இதன் மூலமாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் இப்போது 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கிருஷ்ணய்யா விலகுவது கட்சியை ஒருபோதும் பாதிக்காது என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பிக்களின் ராஜினாமா ஜெகன் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.