ஒய்.எஸ்.ஷர்மிளா web
இந்தியா

"என் அப்பா சிலைகளை உடைப்பதா?’’ களத்தில் இறங்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா! ஆந்திர அரசியலில் நடப்பது என்ன?

``தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்கிறேன்... இனி என் தந்தை ஒய்.எஸ் ராஜசேகர்ரெட்டியின் சிலைகள் அழிக்கப்பட்டால் நானே நேரடியாக களத்தில் இறங்குவேன்’’ - ஒய்.எஸ்.ஷர்மிளா

இரா.செந்தில் கரிகாலன்

``தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்கிறேன்... இனி என் தந்தை ஒய்.எஸ் ராஜசேகர்ரெட்டியின் சிலைகள் அழிக்கப்பட்டால் நானே நேரடியாக களத்தில் இறங்குவேன்’’ என ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் முன்னாள் முதல்வர் ஜெகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதலாக, தன் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அக்கட தேசமான ஆந்திராவில் என்ன நடக்கிறது விரிவாகப் பார்ப்போம்.

என்ன நடந்தது?

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடந்த மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. அங்கே, முதல்வராக இருந்த ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை இழந்து தெலுங்கு தேசம் ஆட்சியைக் கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திராவின் முதல்வரானார். தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் நான்காம் தேதி, தெலுங்கு தேசம் வெற்றி முகத்தில் இருக்கும்போதே, அந்தக் கட்சித் தொண்டர்கள் கலவரத்தில் இறங்கினர்.

ஜெகனின் ஆட்சியில் சந்திரபாபு நாயுடு தொடங்கி பல்வேறு முக்கியத் தலைவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தது. அதுமட்டுமல்லாமல், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களை அடக்கி ஆண்டனர். அது எல்லாவற்றுக்கும் பழி தீர்க்கும் விதமாக கலவரத்தில் இறங்கினர் தெலுங்கு தேசம் கட்சியினர். பல இடங்களில் இரு கட்சித் தொண்டர்களுக்கும் மோதல் வெடித்தது.

``எங்கள் கட்சித் தொண்டர்களைத் தாக்குகிறார்கள்...மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை..வெளியில் வரவே பயமாக இருக்கிறது’’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி.

தொடர்ந்து, ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டுக்கு முன்னால் இருந்த ஆக்கிரமிப்புச் சுவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, விசாகப்பட்டினம் ருசிகொண்டாவில், ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடிக்கு ஆடம்பர பங்களாவைக் கட்டியிருக்கிறார். அதில் முறைகேடு நடந்துள்ளது என ஆளும் தெலுங்குதேசம் குற்றம்சாட்டியது. தவிர, மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மற்றும் ஜெகன்மோகன் பெயரில் இருந்த பல்வேறு திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யபப்ட்டன. முன்னாள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. மார்கானி பரத் கட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தினர். அதுமட்டுமல்ல, கடந்த ஜூன் 30-ம் தேதி, பாபட்லா மாவட்டத்தில் உள்ள பட்டிப்ரோலு பகுதியில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சிலைக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அந்தச் சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் இருப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிலை அருகே போராட்டமும் நடத்தினர்.

எச்சரித்த ஒய்.எஸ்.ஷர்மிளா!

இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஒய்.எஸ்.ஷர்மிளாவிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்க, ``என் தந்தை ஒய்,எஸ்.ராஜசேகர் ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஒழுக்கம், நேர்மை, அர்ப்பணிப்பு நிறைந்த காங்கிரஸ்காரர். அவருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் சம்மந்தமில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்றால், ‘யுவஜன ஸ்ரமிக ரிது காங்கிரஸ்’ என்பதுதான்.

ஷர்மிளா

நான் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்கிறேன். இனி ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் அழிக்கப்பட்டால் நான் அங்கேயே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் கடந்த காலங்களில், கொலைகள், ஏதேச்சதிகாரம், ரவுடி அரசியலைக் கையிலெடுத்திருக்கிறது. அதனால்தான், மக்கள் கடுமையாகத் தண்டித்திருக்கின்றனர். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் இனி இதுபோல் நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ’’ என எச்சரித்திருக்கிறார்...அதோடு, தன் அண்ணனான ஜெகன் மோகனையும்,

ஜெகன் மோகன் ரெட்டி, ஷர்மிளா

``ராஜசேகர் ரெட்டியின் 75-வது பிறந்தநாளுக்கு என்ன செய்தீர்கள். 100 கோடிக்கு மாளிகை கட்டிய நீங்கள், அவருக்குக்காக ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. அவர் நினைவிடத்தில் ஐந்து நிமிடங்கள் இருந்ததோடு சரி... நீங்கள் எப்படி அவரின் வாரிசு எனச் சொல்லிக்கொள்கிறீர்கள்’’ எனவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.