ஒய்.எஸ்.ஷர்மிளா twitter
இந்தியா

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்த ஒய்.எஸ்.ஷர்மிளா

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Prakash J

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவர், தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போகிறார் என்ற பேச்சுகள் அண்மையில் திடீரென எழுந்தன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் இதுகுறித்துப் பேசிய ஒய்.எஸ்.ஷர்மிளா, “தெலங்கானாவில் ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிளவுபடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸுடன் இணையவோ அல்லது இணைந்து செயல்படவோ விருப்பம் தெரிவித்தேன். 4 மாதங்களாக நான் காத்திருந்தும், காங்கிரஸிடம் இருந்து பதில் வரவில்லை. ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் நமது கட்சி இணைப்பு இல்லை. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: அமெரிக்கா: ஆன்லைனில் மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி!

இந்த நிலையில், தம்முடைய கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகவும் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். தெலங்கானா மக்கள் கே.சி.ஆரின் தவறான ஆட்சியால் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர், அவரின் கொடூரமான ஆட்சியைக் கவிழ்க்கத் மக்கள் தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒய்.எஸ்.ஷர்மிளா

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் போட்டிபோட்டு பிரசாரம் செய்து வருகின்றன. குறிப்பாக அம்மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதையும் படிக்க: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு... மக்கள் அவதி!