ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகளுமான YS ஷர்மிளா சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒய்.எஸ். ஆர். தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் காங்கிரஸுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தார். காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த கட்சிக் கூட்டத்தில் பேச்ய YS ஷர்மிளா, தானும், கட்சியின் மற்ற தலைவர்களும் டெல்லியில் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளா, தான் தலைமை ஏற்று நடத்திய ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியையும் காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளாவுக்கு ராகுல் காந்தி சால்வை அணிவித்து வரவேற்றார்.
இது தொடர்பாக பேசிய YS ஷர்மிளா, நாட்டில் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ். அனைத்து சமூகங்களுக்கும் இடையறாமல் சேவை செய்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றினைக்கிறது என தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி அடைந்ததில் தானும் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல்காந்தியை பிரதமராக பார்ப்பது எனது தந்தையின் கனவு என்றும் அதற்கு பங்களிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.