“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த பைக் மற்றும் கார்களை பற்றி ரிவ்யூ செய்வதோடு, பைக்கில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களை 'PRO RIDER 1000' என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிட்டும் வந்துள்ளார். இவரது யூடியூப் சேனல் 12 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ்களை கொண்டிருந்தது. இவர் போடும் பைக் ரைடிங் தொடர்பான வீடியோ ஒவ்வொன்றுக்கும் லட்சக்கணக்கான வியூஸ்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், 16 லட்சம் ரூபாய் விலை கொண்ட Kawasaki Ninja ZX10R என்ற பைக்கின் முழு வேகத்தையும் பரிசோதித்து வீடியோவாக பதிவு செய்ய திட்டமிட்ட அகஸ்தய் சவுகான், மே 3ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் அந்த பைக்கை ஓட்டினார். அப்போது, பைக்கை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறி சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதினார்.
மோதிய வேகத்தில் பைக் தூக்கி வீசப்பட்டது. தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் ஹெல்மெட் சுக்குநூறாக சிதறியதோடு, பலத்த காயம் அடைந்த அகஸ்தய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அகஸ்தய் சவுகான் விபத்தில் இறந்த செய்தியை கேட்டு அவருடைய சப்ஸ்கிரைபர்ஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த பைக் ரைடிங்கின் போது அவர் ரெக்கார்ட் செய்ய பயன்படுத்திய கேமராவை மீட்ட போலீசார், அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவரது பைக் 294 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள மூத்த போலீஸ் சூப்பிரண்டு கலாநிதி நைதானி, “பைக் ஓட்டுபவர்கள் குறிப்பாக இளைஞர்கள், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
யூடியூபர் அகஸ்தய் சவுகான் ஓட்டி விபத்துக்குள்ளான Kawasaki Ninja ZX10R பைக் மணிக்கு சுமார் 300 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த சூப்பர் பைக் இந்தியாவில் ரூ.16 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 200 பிஎஸ் ஆற்றலையும் 115 எம்எம் Max Torque-யும் வெளிப்படுத்தக்கூடிய 4-stroke In-Line எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 207 கிலோ எடை கொண்டது.
சாதாரணமான 125 முதல் 150 சிசி திறன் கொண்ட பைக்குகளைவிட சுமார் 15 மடங்கு திறன் கொண்டது கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர். மேலும் இந்தியாவில் வழக்கமான ரூ.10 லட்சம் மதிப்பிலான செடானை விட இரண்டு மடங்கு திறன் கொண்டது.
இதில் 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள்ளும் மற்றும் 0-200 கி.மீ. வேகத்தை வெறும் 10 வினாடிகளிலும் துரிதப்படுத்த முடியும். இந்த பைக்கை சாலைகளில் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் கையாள்வது கூட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.