இந்தியா

காணாமல்போன காங்கிரஸ் கட்சியின் யூடியூப் பக்கம்!? தொழில்நுட்ப கோளாறா? அல்லது சதிவேலையா?

காணாமல்போன காங்கிரஸ் கட்சியின் யூடியூப் பக்கம்!? தொழில்நுட்ப கோளாறா? அல்லது சதிவேலையா?

ச. முத்துகிருஷ்ணன்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் திடீரென மாயமானது. இதனை காங்கிரஸ் கட்சி தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக கூகுள், யூடியூப் நிர்வாகத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொழில் நுட்ப கோளாறா அல்லது சதி வேலையா என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இந்த யூடியூப் சேனல் மூலமாகத் தான் கட்சித் தலைவர்களின் மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி உரைகளும், செய்தித் தொடர்பாளர்கள், மூத்த தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புகளும் ஒளிபரப்பப்படும்.

கட்சியை கள அளவில் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து புதிய எழுச்சியை உருவாக்க நாடு முழுவதும் பாரத் ஜோடோ என்ற பெயரில் பாதயாத்திரை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை தொடங்குகிறார். அவரின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த யாத்திரை தொடங்க சில நாள்களே உள்ள நிலையில், அக்கட்சிக்கு புதிய தலைவலியாக யூடியூப் சேனல் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த யூடியூப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இருப்பினும் முன்னதாக பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் எதுவும் அந்த பக்கத்தில் இல்லை. அவை ஒருவேளை பிரைவேட் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது டெலிட் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.