குஜராத் முகநூல்
இந்தியா

குஜராத்: உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்... திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

குஜராத்தில் நண்பர்களோடு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அண்மைக்காலமாக இளம் வயதினரிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி வருகிறது. அதிலும், பெண்களைவிட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என ஆய்வுகளே தெரிவிக்கின்றன.

இளம் தலைமுறையினரிடம் உடல் உழைப்பு குறைந்து காணப்படுவது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், அதிகப்படியான மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவை மாரடைப்புக்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சில சமயம் குடும்ப வரலாறும் ஒரு காரணமாக இருக்கிறது.

இதுபோன்றொரு நிகழ்வு தற்போதும் நிகழ்ந்துள்ளது. அதன்படி குஜராத்தில் தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஹேமந்த் பாய் ஜோகல் என்ற போட்டித்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த இளைஞர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள பாருடியா கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த் பாய் ஜோகல். இவர், காவல்துறையில் ஆட்சேர்ப்பு தேர்வுக்காக தன்னை தயாரித்து கொள்ள ஜாம்நகரை சேர்ந்த அஹிர் சமாஜ் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதற்காக அன்றாடம் தனது சக மாணவ நண்பர்களோடு உடற்பயிற்சி செய்வது வழக்கம்.

இந்த நிலையில்தான், கடந்த 25 ஆம் தேதி ஹேமந்த் தனது நண்பர்களோடு ஜாகிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார். அப்போது, உடனிருந்த சக போட்டித்தேர்வு நண்பர்கள் இவரை எழுப்ப முற்பட்டுள்ளனர். ஆனால், அவர் எழும்பவில்லை.

எனவே, உடனடியாக அருகிலிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரை சோதித்த மருத்துவர், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இளைஞர் மயங்கி விழுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று மாரடைப்பால் இளம் தலைமுறையினர் இறப்பது முதன்முறை அல்ல. இம்மாத தொடக்கத்தில் கூட, ஒன்பது வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் தங்களின் உடல்நலனில் அதிக அக்கறைக்கொண்டிருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.