ரீல்ஸ்  முகநூல்
இந்தியா

ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்! 6 அடி நீள பாம்பை வாயில் கடித்தவருக்கு நேர்ந்த கதி

தெலங்கானாவில் ரீல்ஸ்க்கு லைக் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், வாயில் பாம்பை கடித்து சாகசம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தெலங்கானாவில் ரீல்ஸ்க்கு லைக் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், வாயில் பாம்பை கடித்து சாகசம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தரப்பு வயதினரையும் வெகுவாக ஈர்த்திருப்பது சமூக வலைதளங்கள்தான். குறிப்பாக, அதில் லைக்குகள், கமெண்ட்டுகள், வியூஸ்கள் பெற வேண்டும் என்பதற்காகவே உயிரை பயணம் வைத்து எத்தனையோ சாகத்தை செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

இப்படி, ஆபத்தான முறையில் மேற்கொள்ளப்பட்ட சாகசங்களால் பறிபோன உயிர்கள் ஏராளம். இந்தவகையில், தெலங்கானாவை சேர்ந்த சிவா என்ற இளைஞர் பாம்பை தன் வாயால் கடிப்பது போன்ற வீடியோக்களை எடுத்து தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தின் பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தை சேர்ந்தவர்தான் கங்காராம். இவர் ஒரு பாம்பு பிடி வீரர். இவரது மகன் சிவ ராஜூலு வயது 32.

ஒரு நாள் தேசாய்பேட் காலனிப்பகுதியில் புகுந்த 6 அடி நாகப்பாம்பை பிடிக்க வேண்டும் என்று கங்காராம் மற்றும் அவரது மகன் சிவ ராஜூலு ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி பாம்பு பிடிக்க வேண்டும் என்று தன் தந்தை கற்றுக்கொடுத்ததில் தேர்ச்சிப் பெற்ற இளைஞர் சிவ ராஜூலு அவ்விடத்திற்கு விரைந்து அந்த பாம்பையும் பிடித்துள்ளார்.

அத்தோடு விட்டுவிடாமல்... 6 அடி நீளமுள்ள பாம்பை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், சிலநிமிடங்கள் வரை அதை வாயில் வைத்து நன்றாக கடித்தும், தனதுதலை முடியை ஸ்டைலாக வாரியும் பல போஸ்களை கொடுத்து அதை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.

பல சாகசங்கள் செய்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தப்போது தன்னை பாம்பு கடித்ததைக் கூட உணராத இந்த நபர், பாம்பு விஷம் தலைக்கேற சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்த சிலர்.உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி செய்ய வேண்டாம் என்று பலர் அந்த இளைஞருக்கு அறிவுறுத்தல் வழங்கியும் அதை பொருட்படுத்தாமல், லைக்குகளுக்காக இப்படி செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல பல சம்பவங்கள் நாடுமுழுக்க தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. பொழுதுபோக்கு ஊடகங்களில் முழுவதுமாக மூழ்கி விடுவதே இதுபோன்ற இறப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.