இந்தியா

“எந்த தவறும் செய்யவில்லை; யாருக்கும் பயம் இல்லை” - புகாருக்கு காங்கிரஸ் ஸ்ரீனிவாசன் பதிலடி

“எந்த தவறும் செய்யவில்லை; யாருக்கும் பயம் இல்லை” - புகாருக்கு காங்கிரஸ் ஸ்ரீனிவாசன் பதிலடி

webteam

டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிவரும் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாசன் மீது பல்வேறு கட்சிகள் புகார்களை முன்வைத்துள்ளனர்.

டெல்லியில் கொரோனா தொற்றின் 2 வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாசனும் அவரது குழுவும் ட்விட்டர் வாயிலாக வரும் உதவிகோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா மருந்துகளை கள்ளச்சந்தையில் முறைகேடாக விற்பதாக கூறி புகார் எழுந்தது.

இந்த குற்றசாட்டுகள் குறித்து ஸ்ரீனிவாசன் கூறும் போது, “ நாங்கள் எங்களது பணியை நிறுத்தப்போவதுமில்லை. நாங்கள் அவர்களுக்கு அஞ்சப்போவதுமில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்களது சின்னஞ்சிறிய உதவிகள் மக்களின் உயிரை காப்பாற்றுகிறது” என்றார்.

டெல்லி காவல்துறை கூறும் போது, “ அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்று தொடர்பான மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக கூறி தீபக் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஸ்ரீனிவாசன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களிடம் விசாரணை நடந்தது. குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீனிவாசனின் அலுவகத்திற்கு சென்று விசாரணை செய்து அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.” என்றது. 

முன்னதாக, நியூசிலாந்து தூதரகம் மற்றும் பிலிப்பைன்ஸ் தூதகரத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நியூசிலாந்து தூதகரம் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாசன் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது தொடர்பான வீடியோக்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என மன்னிப்புக்கோரி அதனை நீக்கியது. 

தகவல் உறுதுணை மற்றும் புகைப்பட உதவி : என்.டி.டி.வி