இந்தியா

மாமியார் வீட்டால் மனமுடைந்த இளைஞர்..! செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலம்..!

மாமியார் வீட்டால் மனமுடைந்த இளைஞர்..! செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலம்..!

Rasus

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் மரண வாக்குமூலத்தை அவர் தனது மொபைலில் செல்ஃபி வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ண லன்கா கிராமத்தைச் சேர்ந்தவர் குருவா ரெட்டி. வயது 27. இவர் விஜயவாடா அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குருவா ரெட்டியின் சட்டை பையில் மொபைல் போனும், அவரின் அடையாள அட்டையும் இருந்துள்ளது. அத்தோடு மட்டுமில்லாமல் மொபைலில் செல்ஃபி வீடியோவாக தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார் குருவா ரெட்டி.

அதில், தனது மனைவி மற்றும் அவரின் உறவினர்களே தற்கொலைக்கு காரணம் என கூறியுள்ளார். மேலும் பெற்றோரை கடைசி வரை இருந்து கவனிக்க முடியாத காரணத்தினால் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். “காயத்ரி, என்னை நீ ஏமாற்றிவிட்டாய். என் மீது பொய் வழக்கு போட்டு காவல்நிலையத்தில் உட்கார வைத்துவிட்டாய். உன் பெற்றோரும், உன் சகோதரும் தான் என் சாவிற்கு காரணம். என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. என்னால் இந்த மன உளைச்சலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தயவுசெய்து உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உதவி ஆணையர் காஞ்சி ஸ்ரீநிவாஸ் கூறும்போது, “ குருவா ரெட்டியும், காயத்திரியும் 10-ஆம் வகுப்பு முதலே ஒன்றாக பழகியுள்ளனர். குருவா ரெட்டி 10-ம் வகுப்போடு தனது படிப்பை நிறுத்தி விட்ட நிலையில் காயத்ரி இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார். காயத்ரி படிப்பை முடிக்க குருவா ரெட்டி பண உதவியும் அளித்துள்ளார். இருவர் வீட்டின் சம்மதத்துன் கடந்த 5 வருடங்களுன் முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களாக காயத்திரியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வேறு ஒருவருடன் பழகுவதாக குருவா ரெட்டி சந்தேகம் அடைந்துள்ளார். இது குறித்து காயத்ரியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். அதனால் காயத்ரியும் அவரின் குடும்பத்தினரும் தூக்க மாத்திரை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் உயிர் பிழைத்தனர். இதனையடுத்து காயத்ரியின் குடும்பத்தினர் குருவா ரெட்டி மீது போலீசில் புகார் அளித்தனர். அதன்தொடர்ச்சியாக வழக்கமான விசாரணைக்காக குருவா ரெட்டிக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.”என்றார். இந்நிலையில்தால் செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டு தற்கொலை செய்துள்ளார் குருவா ரெட்டி. இதுதொடர்பாக போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.