செய்தியாளர் : ரமேஷ் கண்ணன்
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பிளாக்கத்தடம் என்ற மலை கிராமத்தில், ஓர் இளைஞரின் உடல் படுகாயங்களுடன் கண்டறியப்பட்டது. அந்த உடல் ஒரு பாக்குமரத்தில் பிளாஸ்டிக் கயிறால் கட்டப்பட்டிருந்தது. இக்கொலைபற்றி பீர்மேடு காவல்துறை நடத்திய விசாரணையில், கொலையானது அதே ஊரைச் சேர்ந்த அகில் பாபு என தெரியவந்தது. உடலை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.
கட்டுமானத் தொழிலாளியான அகில் பாபு, ஏதோ முன்விரோதத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது தாய் துளசியும் தம்பி அஜித்தும் கூறினர். தலையில் பலமாக தாக்கப் பட்டதால் மூளையில் ரத்தம் கசிந்து உயிரிழப்பு நேரிட்டதாக உடற்கூராய்வு அறிக்கை கூறியது. தாய் மற்றும் தம்பியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கண்ணீர் சிந்தி கதறி அழுத அவர்கள், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அகில்பாபுவின் உடலை அடக்கம் செய்தனர்.
கொலை குறித்து கிராமத்தினரிடம் விசாரித்தது காவல்துறை. அப்போது சகோதரர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதும், முந்தைய நாளும் சண்டை நடந்ததும் தெரியவந்தது. அஜித்தையும் துளசியையும் தனித்தனியே விசாரித்தபோது, இருவரும் வெவ்வேறு கதையைக் கூறியதில் இருந்தே, உண்மை ஒவ்வொன்றாக வெளிவந்தது.
கணவரை இழந்த துளசி, 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். கட்டுமானத் தொழிலாளிகளான மகன்கள் இருவரும் மதுப்பழக்கம் கொண்டவர்கள். சம்பவத்தன்று, மூத்த மகன் அகில், வீடு திரும்பியபோது, தாயும் தம்பியும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். மதுபோதையில் இருந்த அகில், உள்ளே பாய்ந்து தொலைக்காட்சி பெட்டியை உடைத்துள்ளார். தம்பி அஜித்தும் மதுபோதையில் இருந்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பளப் பணத்தை தாயிடம் கொடுப்பது பற்றியும், வீட்டுச் செலவை நிர்வகிப்பது பற்றியும் வாக்குவாதம் முற்றியதோடு, இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். விலக்கி விடச் சென்ற தாயை, அகில் தள்ளிவிட்டதால், தம்பி அஜித் ஆவேசமடைந்துள்ளார்.
இரும்புக்கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கியதில், சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார் அகில் பாபு. இதை எதிர்பாராத அஜித்தும் துளசியும் அதிர்ந்து போயுள்ளனர். கொலையை மறைக்க முடிவு செய்த இருவரும், அகிலின் உடலை 100 மீட்டர் தூரத்துக்கும் மேல் இழுத்துச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத தனியார் தோட்டம் ஒன்றில், உடலை நின்ற நிலையில் வைத்து, பிளாஸ்டிக் கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். ஏதோ தகராறில், யாரோ அடித்துக் கொன்றதாக இருக்க வேண்டுமென சித்தரிப்பதற்காக, இவ்வாறு செய்துள்ளனர்.
இவற்றையெல்லாம் காவல் துறையின் விசாரணையில் கண்டறிந்த பின், இருவரும் கொலையை ஒப்புக் கொண்டுள்ளனர். மூத்த மகன் உயிரிழந்தாலும் இளைய மகனை பாதுகாக்கும் பதைபதைப்பில் இப்படி செய்ததாக கூறியுள்ளார் தாய் துளசி.