பீகார் முகநூல்
இந்தியா

பீகார் | விபரீத முடிவெடுக்க நினைத்து தண்டவாளத்தில் படுத்த மாணவி... தூங்கிவிட்டதால் நடந்த நல்லது!

ஜெனிட்டா ரோஸ்லின்

பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள சகியா என்ற ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் அத்தடத்தில் ரயில் வராததால் படுத்திருந்தவர், ஒருகட்டத்தில் தன்னை அறியாமல் உறங்கிவிட்டார்.

இந்த நிலையில்தான் மோதிஹிரியிலிருந்து முசாபர்பூர் வரை செல்லும் ரயிலொன்று அத்தடத்தில் வந்துள்ளது. அப்போது, தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் (மாணவி என தெரிகிறது) படுத்துகிடப்பதை கண்ட லோகோ பைலட் உடனடியாக சுதாரித்து கொண்டு, அவசர பிரேக்குகளை பயன்படுத்தி, தக்க நேரத்தில் ரயிலை நிறுத்தியுள்ளார். சரியாக அப்பெண் தலை அருகேயே ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அப்பெண்னின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதனையடுத்து, ரயிலிருந்து இறங்கிய லோகோ பைலட்டும் (loco pilot), அங்கிருந்த பயணிகளும் அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், அங்கிருந்து செல்ல மறுத்த அவர், தான் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என அடம்பிடித்துள்ளார்.

இதென்னப்பா சோதனை என நினைத்த அங்கிருந்தோர், பொறுமயாக அப்பெண்ணிடம் ‘ஏன் இப்படி தவறான முடிவெடுக்க நினைக்கிறீர்கள்?’ என கேட்டுள்ளனர். அதற்கு அப்பெண், “குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருக்கிறேன். எனது காதல் விவகாரத்தை குடும்பத்தார் ஒப்புகொள்ளவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்க நினைத்தேன்” என பதிலளித்துள்ளார். மேலும், “என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? நான் சாகவேண்டும்.. உங்களுக்கும் இதற்கு என்ன சம்பந்தம் உள்ளது?” என்று கேட்டு அழுதுள்ளார்.

பிறகு அவரை சமாதானப்படுத்திய பயணிகள், அங்கிருந்து அப்பெண்னை அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலையால் இறக்கின்றனர். உண்மையில் தற்கொலை முடிவென்பது எந்தப் பிரச்னைகக்குமே தீர்வாக அமைய முடியாது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.