இந்தியா

தெலங்கானாவில் மறக்கப்பட்ட 1000 வரலாற்று சின்னங்களைக் கண்டறிந்த இளம் ஆய்வாளர்!!

தெலங்கானாவில் மறக்கப்பட்ட 1000 வரலாற்று சின்னங்களைக் கண்டறிந்த இளம் ஆய்வாளர்!!

webteam

தெலங்கானா மாநிலம், ரகுநாதபுரத்தில் உள்ள காஞ்சன் பள்ளியைச் சேர்ந்த 25 வயதான அரவிந்த் பஹிடே, காலவெள்ளத்தில் மக்களால் மறக்கப்பட்ட ஆயிரம் பாரம்பரிய வரலாற்று இடங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார். இதுபற்றிய செய்தியை தி நியூஸ்மினிட் இணையதளம் வெளியிட்டுள்ளது.

"எனக்கு எப்போதுமே பள்ளி வரலாற்று நூல்களில் படித்த புகழ்பெறற இடங்களைப் பார்ப்பதிலும் படிப்பதிலும் ஆர்வம் அதிகாக இருந்தது. வரலாற்றில் உள்ள இந்த ஆர்வம்தான் என்னை விசித்திரமான மற்றும் விலைமதிப்பற்ற இடங்களை நோக்கி என்னை நகர்த்துகிறது" என்று கூறும் அரவிந்த், கடந்த சில ஆண்டுகளாக, தெலங்கானாவில் உள்ள பல்வேறு பாரம்பரிய தளங்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

"பல பாரம்பரிய இடங்களைப் பற்றி பக்கத்து கிராமத்தில் உள்ளவர்களுக்குக்கூட தெரியாது" என்கிறார் அரவிந்த், காகத்தியா பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்தவர். இன்டர்மீடியட் முடித்ததுமே அவருக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் மற்றும் துறைமுகங்களைத் தேடுவதில் ஆர்வம் தொடங்கிவிட்டது. தனக்குத் தெரிந்த தகவல்களை புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கினார் அரவிந்த்.

விவசாயிகளான அவரது பெற்றோர் முதலில் மகன் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதாகக் கவலைப்பட்டனர். பின்னர் அரவிந்த் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியானதும் மகிழ்ந்து ஆதரிக்கத் தொடங்கினர். "என் பெற்றோர்கள் என்னைப் புரிந்துகொண்டனர். நான் அவர்களுடைய வருமானத்தில் வாழ விரும்பவில்லை. ஏதாவது சிறு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும்" என்று உற்சாகத்துடன் பேசுகிறார் இளம் தொல்லியல் ஆய்வாளரான அரவிந்த்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலையில் இருந்த முப்பது முக்கியமான வரலாற்று இடங்களைக் கண்டுபிடித்துள்ளார். தற்போது அவற்றை அரசு அதிகாரிகள் உதவியுடன் புனரமைப்பு செய்திருக்கும் அரவிந்த், "தெலங்கானாவில் பல இடங்கள் இப்படித்தான் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. அவற்றை உதவியுடன் வெளியே கொண்டுவரவேண்டும்" என்று விரும்புகிறார்.

காப்பிரைட் உரிமை கோராமல் கூகுள் மேப்பில் 25 ஆயிரம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தெலங்கானாவின் பதினோறு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படங்கள் அவை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல ஆய்வாளர்கள், அரவிந்த் கண்டறிந்த தேவுனிகுட்டா, பானிகிரி துறைமுகம் போன்ற இடங்களின் கட்டடக் கலை நுட்பங்கள் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது தொல்லியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள அரவிந்த் எழுதிய நூலை தெலங்கானவின் மொழி மற்றும் கலை பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. பாரம்பரிய இடங்களை ஆவணப்படுத்தும் பணியில் மாநில அரசின் தொல்லியல் துறைக்கு உதவி செய்துவரும் இந்த இளம் ஆய்வாளர், மண்ணில் புதையுண்ட வரலாற்றின் எச்சங்களைத் தேடும் தீராத வேட்கைகொண்ட பயணியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.