உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் திவாகர், ’நீங்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறீர்கள், உங்கள் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை அரசாங்கம் ஏன் தாங்க வேண்டும்’ என்று ஒரு பெண்கள் குழுவினரைக் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் "பச்சே ஆப் பேடா கரோ அவுர் ரூபியா ஹம் டீன் (நீங்கள் குழந்தைகளை உற்பத்தி செய்கிறீர்கள், நாங்கள் ஏன் கல்விக்கு பணத்தை தரவேண்டும்)" என்று பாஜக எம்எல்ஏ பெண்களிடம் கூறினார். தனது தொகுதியில் நடந்த ஒரு பொது உரையாடலின் போது, தனியார் பள்ளிகளில் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்காக ஒரு பெண்கள் குழு, அவுரையா எம்.எல்.ஏ ரமேஷ் திவாகரை அணுகியபோது இந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சமீர் சிங், “இந்த பிரச்சினை குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் பெண்களிடம் இழிவான முறையில் பேச யாருக்கும் உரிமை இல்லை. ” என தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, “பாஜக எம்.எல்.ஏ.வின் கருத்து துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது, இது பாஜகவின் தன்மை. பாஜகவும் அதன் தலைவர்களும் யாருக்கும் உதவுவதில்லை, பெண்களை அவமானப்படுத்துகிறார்கள் “என்று கூறினார்.