இந்தியா

வேறு மத இளைஞருடன் பேசியதால் இளம்பெண்ணை துன்புறுத்திய காவலர்கள் ! வைரலாகும் வீடியோ

webteam

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவரை அடித்து துன்புறுத்திய பெண் போலீசார் உள்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்து மதத்தை சேர்ந்த இவர் முஸ்லிம் நண்பர் ஒருவருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றதாக தெரிகிறது. அதனைக் கண்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த சிலர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இதுதொடர்பாக போலீசாருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவரையும் தனித்தனியாக போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சுதாவிடம், நீ ஒரு இந்துவாக இருந்துக்கொண்டு எப்படி முஸ்லிம் இளைஞரோடு பழகுகிறாய்..? என காவலர்கள் சர்ச்சைக்குரிய முறையில் அத்துமீறி கேள்வி கேட்கின்றனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. வீடியோவில் சுதாவை தவிர நான்கு காவலர்கள் உள்ளனர்.

அதில், “ இந்துவாக இருந்துக் கொண்டு எப்படி முஸ்லிம் இளைஞரை விரும்புகிறாய்... இனி எப்போதாவது முஸ்லிம் இளைஞரை விரும்புவாயா.? ” என கேட்கின்றனர் போலீஸ். அந்தப் பெண் அதற்கு பதிலளிக்க முயற்சிகையில் அவர் அருகில் இருக்கும் பெண் போலீசார் ஒருவர் அவரை பேசவிடாதபடி தொடர்ச்சியாக அடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து சம்பந்ததப்பட்ட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் உ.பி. போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆணும், சுதாவும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பருவம் வந்தவர்கள். அத்தோடு மட்டுமில்லாமல் இருவர் வீட்டில் இருந்தும் எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை. பெண்ணிடம் அத்துமீறி நடந்துக் கொண்ட காவலர்களின் நடவடிக்கையை சமூக வலைத்தளங்களிலும் பலர் விமர்சித்து வருகின்றனர்.