நிலச்சரிவில் சிக்கிய புகைப்படம் புதிய தலைமுறை
இந்தியா

வயநாடு: “நாங்க மூணுபேரும் நல்லா இருக்கோம்; பயப்பட வேண்டாம்...” - வைரல் ஃபோட்டோவில் இருந்தவர் பேட்டி!

வயநாடு வெள்ளச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில், புகைப்படம் வைரலாகிய நிலையில், தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக சம்பந்தப்பட்ட இளைஞர் விளக்கமளித்துள்ளார்.

PT WEB

நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதியில், சேதமடைந்த வீட்டிற்குள் சேற்றுக்கு மத்தியில், புகைப்படம் ஒன்று கிடந்துள்ளது. அதில் ஒரு ஆண் இரண்டு பெண்கள் இருந்தனர். மிகவும் சேதமடைந்த அந்த வீட்டில் எடுக்கப்பட்ட அப்புகைப்படம், இணையத்தில் வைரலானது. இதையடுத்து பலரும், அப்படத்தில் இருப்பவர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்துவிட்டனரோ என அஞ்சி இணையத்தில் வேதனை தெரிவித்து வந்தனர்.

வைரலான குடும்ப புகைப்படம்

குறிப்பாக இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அப்புகைப்படத்துடன் கூடிய கண்ணீர் பதிவுகள் அதிகம் காணப்பட்டன. இந்நிலையில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக புகைப்படத்தில் இருக்கும் இளைஞர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர், “நிலச்சரிவு நடந்த நேரத்தில் எனது சகோதரிகள் யாரும் வீட்டில் இல்லை. நானும் அம்மாவும் மட்டுமே இருந்தோம். நிலச்சரிவு சத்தம் கேட்டவுடன் நாங்கள் இருவரும் வீட்டின் எதிரே உள்ள ஒரு மலைக்கு சென்றதால் இருவரும் உயிர்பிழைத்துவிட்டோம்.

இணையத்தில் பரவிய புகைப்படத்தால், தவறான புரிதல் வந்துவிட்டது. அந்த நோக்கில் எங்கள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் யாரும் பகிரவேண்டாம். நாங்கள் நலமாக இருக்கிறோம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.