உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான வழக்குகளை கைவிட அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டு தடை உத்தரவை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய இணை அமைச்சராக உள்ள ஷிவ் பிரதாப் சுக்லா, பாஜக எம்.எல்.ஏ. ஷீடல் பாண்டே உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, மேற்கூறிய வழக்குகளை கைவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 21 ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில், கிரிமினல் வழக்கு தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதா அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கு தொடர்பான புதிய சட்ட திருத்தம் தாக்கல் செய்யும் போது பேசிய யோகி ஆதித்யநாத், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது, மாநிலம் முழுவதும் 20000க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது, செய்யப்படும் திருத்ததால் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும் என யோகி ஆதித்யநாத் கூறினார்.