உத்தரபிரதேசத்தில் கூலித் தொழிலாளர்கள் மற்றும் கட்டடத் தொழிலாளர்களின், அன்றாடத் தேவைகளுக்காக நிதியுதவி வழங்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனிடையே நாளை ஒருநாள் மக்கள் தாங்களாகவே சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அன்றாட தினசரி கூலி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் 15 லட்சம் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கும் 20.37 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தில் 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 9 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். போதுமான அளவு தனிமை வார்டுகள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.