ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தாம்ராவில் அதி தீவிர புயலான 'யாஸ்' கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 130 முதல் 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள், மரங்கள், வேரோடு சாய்ந்து விழுந்தன.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்கு பகுதியில் கரையை கடந்தது. இதனால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களிலும் மேற்குவங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மணிக்கு 130 முதல் 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால், மின்கம்பங்கள், மரங்கள், வேரோடு சாய்ந்து விழுந்தன.
பாலாசோரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் புயல் கரையை கடந்திருப்பதால் அம்மாவட்டத்திலும் அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும், கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது.
யாஸ் புயல் தற்போது வலுவிழந்து, நள்ளிரவு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜெனாவை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
யாஸ் புயல் காரணமாக ஒடிசாவில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலமான மேற்குவங்கத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 லட்சம் பேர் மேடான பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். யாஸ் புயலால் மேற்குவங்கத்தின் தெற்கு பர்கானாஸ், வடக்கு பர்கானாஸ், ஹவுரா உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள வெள்ளத்தில் மிதக்கின்றன.
முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்ததால் கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளன. குறிப்பாக சாகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் அப்பகுதியே தீவு போல காட்சியளிக்கிறது.