புதிய வகை கொரோனா குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் எத்தகைய கொரோனா பரவலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், ஒமைக்ரான் XE என்ற புதிய கொரோனா திரிபு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் பரவியதாகத் தகவல் வெளியான நிலையில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் புதிய வகை கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
புதிய வகை கொரோனா குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று ட்விட்டரில் அமைச்சர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் குறித்து கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய கொரோனா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறியதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எத்தகைய கொரோனா பரவலையும் எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளது. இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவ உள்ளதாக வெளியான தகவல் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நியூஸ் 360 டிகிரி வீடியோவில் விரிவாக காண்போம்.