pm modi, sam pitroda pt web
இந்தியா

“பிட்ரோடா கூறியதில் என்ன தவறு இருக்கு; ஆப்பிரிக்கர்கள் என்றாலே தரக்குறைவா?” ஆதி வரலாறு சொல்வதென்ன?

நாடு மழுவதும் மக்களவைத் தேர்தல் பரபரப்புடன் நடந்துவருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவரான சாம் பிட்ரோடா தெரிவித்திருந்த கருத்தை பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

Angeshwar G

என்ன கூறினார் சாம் பிட்ரோடா? ஏன் விவாதம் ஆகிறது?

காங்கிரஸ் அயலக தலைவர் சாம் பிட்ரோடா ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், “கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கும் இந்தியாவை போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். நாம் வெவ்வேறு மதங்கள், மொழிகள், பழக்கவழக்கங்கள், இனங்கள், உணவுகளை மதிக்கிறோம். அதுதான் நாம் நம்பும் இந்தியா , அங்கு அனைவருக்கும் இடமுள்ளது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக தரப்பு பிட்ரோடாவின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில், “தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவதை நாடு பொறுத்துக்கொள்ளாது. ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர் பிட்ரோடாவின் பேச்சு எனக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. என் மீது அவதூறு வீசப்படும்போது என்னால் பொறுத்துக்கொள்ள முடியும், என் மக்கள் மீது அவதூறு வீசப்பட்டால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ்க்கு சம்பந்தம் இல்லை...

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரங்களில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிவைப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா பேசிய ஒப்புமைகள் துரதிர்ஷ்டமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் இவ்வகையான ஒப்புமைகளில் இருந்து தன்னை முற்றிலுமாக விளக்கிக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சாம் பிட்ரோடா. அவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவை மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்தானே நாம்...

இதுதொடர்பாக சிந்து சமவெளி நாகரீகம், ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சார்ந்த நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களாகத்தான் நாம் நம்மை பார்க்கிறோம். அது ஆரியர்களாக இருந்தாலும் சரி, திராவிடர்களாக இருந்தாலும் சரி ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்துதான் இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளோம். அப்படி இருக்கையில், இதில் ஆப்பிரிக்கா என சொல்லும்போது அவமானப்படுத்தக்கூடிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. தோல் நிறத்தை வைத்து பிட்ரோடா கூறியதாகத்தான் பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பிட்ரோடா கூறியதில் என்ன பிரிவினைவாதம் இருக்கிறது

பிட்ரோடா கூறியதில் என்ன பிரிவினைவாதம் இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. மக்கள் வெவ்வேறு இனம் (racial) சார்ந்தவர்கள்; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக வடிவு, ஒவ்வொரு வண்ணம் இருக்கிறது. மங்கோலிய அல்லது அதனை ஒட்டிய இனக்குழுவைச் சேர்ந்த வடகிழக்கே இருக்கும் மக்களது முகஜாடை அப்படிதான் இருக்கும்.

தென் பகுதியைச் சேர்ந்தவர்கள், இனக்குழுவாக பார்க்கும்போது, நாம் நம்மை திராவிடர்களாக அடையாளம் காட்டிக்கொள்கிறோம். திராவிடம் என சொல்லும்போது, இதற்கே உரிய கூறுகளான கரிய வண்ணம், சுருள் முடி, நீண்ட பல் போன்றவை நம்முடைய பண்புகளாக உள்ளன. இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பண்புகள் இருக்கும்போது அதை சொல்லுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

PMModi

இதை பிரிவினைக்கான விஷயமாக அவர்கள்தான் (பாஜக) அதை கையிலெடுத்து அரசியல் செய்து வருகிறார்கள். பிட்ரோடா, இத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், வேற்றுமையிலும் இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்கிறார். நாம் சிறுவயதில் படித்த பள்ளிப்பாடங்களிலேயே வேற்றுமையில் ஒற்றுமை என இருக்கிறது. ஒற்றைமயமாக்கள் என்பதை பாஜக கையில் எடுப்பதால்தான் இதெல்லாம் சிக்கலாகிறது. ‘ஆப்பிரிக்கர்களைப் போல’ என அவர் சொன்னது தோல் நிறத்தைத்தான் என எப்படி எடுத்துக்கொள்ள முடியும். வண்ணத்தைப் பற்றி எங்குமே அவர் பேசவில்லை.

ஆப்பிரிக்கர்கள் என்று சொன்னாலே தரக்குறைவான விஷயமாக இருக்கிறதா என்ன? அப்படி என்றால் யாரிடம் இனவெறி (racism) உள்ளது. ஆப்பிரிக்காவிலும் பல்வேறு நிறங்கள் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லோருமே ஒரே குரங்கில் இருந்துதான் வந்துள்ளோம்” என தெரிவித்தார்.