மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ANI twitter page
இந்தியா

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த சங்க செயலாளர்கள் இடைநீக்கம்!

PT WEB

தலைநகர் டெல்லியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து, அவரை கைது செய்யவேண்டும் என 2 வாரங்களுக்கு மேலாக பெண் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற சில வீரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் என பல தரப்பும் ஆதரவு அளித்துவரும் நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கம், இணைக்கப்பட்ட மாவட்ட பிரிவுகளின் செயலாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.

இது குறித்து ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் தலைவர் ரோஹ்தாஷ் சிங் வெளியிட்டுள்ள கடிதத்தில், “வீரேந்தர் சிங் தலால், ஹிசாரின் சஞ்சய் சிங் மாலிக் மற்றும் மேவாட்டின் ஜெய் பகவான் ஆகியோரை இடைநீக்கம் செய்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். குறிப்பிடப்பட்ட இவர்கள் சங்கத்தின் விதிகளை மீறி டெல்லியில் நடைபெறும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் , டெல்லியில் நடைபெறும் மல்யுத்த வீரார்களின் போராட்டம் தினம்தோறும் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக, ஹரியானா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாய சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.