இந்திய மல்யுத்த விளையாட்டு அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ள வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் சிங் மீது மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய வீராங்கனைகள், நாடாளுமன்ற புதிய கட்டடம் அருகே பெண்கள் சபை கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி, நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடந்தபோது ஜந்தர் மந்தரில் இருந்து பேரணியாகச் செல்ல முயன்றனர் வீராங்கனைகள் மற்றும் வீரர்கள். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அனைவரையும் வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர்.
ஜந்தர் மந்தரில் போராடிய 109 பேர் மற்றும் ஆதரவாளர்கள் என மொத்தம் 700 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். பின்னர், வீராங்கனைகள் விடுவிக்கப்பட்ட நிலையில், மாலையில் வீரர்கள் அவர்களது ஆதரவாளர்களையும் விடுவித்தனர். ஆனால், போராட்ட அமைப்பாளர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளில் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்திய கட்டில், மெத்தைகள், ஏர்கூலர்கள், மின்விசிறிகள் மற்றும் தார்பாய்கள் அகற்றப்பட்டன.
இதற்கிடையே மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்த போது நடந்த குழப்பம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்காக விளையாடிய வீரர், வீராங்கனைகளை போலீசார் சுற்றி வளைத்து தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது உரிமைக்காகப் போராடும் வீரர்களை இப்படித்தான் நடத்துவார்களா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக் கொண்ட டெல்லி போலீஸ், அமைதியாகப் போராட்டம் நடத்திய எங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய 7 மணி நேரத்தைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா?
இந்திய அரசு தனது விளையாட்டு வீரர்களை எப்படி நடத்துகிறது என்று இந்த உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லி சிறப்பு காவல் ஆணையர் (சட்டம் - ஒழுங்கு) தீபேந்திர பதக் கூறும்போது, “மல்யுத்த வீரர்கள் செய்தது மிகவும் பொறுப்பற்ற செயல். புதிய பாராளுமன்ற கட்டடத்தின் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. ஒன்பதுக்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தை மீறி நடந்து கொண்டனர்” என்றார்.
இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் மீண்டும் கூடி போராட்டத்தைத் தொடர இருப்பதாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சாக்ஷி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் அங்கு கூடுதல் பதற்றம் நிலவுகிறது.