ஆந்திராவில் 206 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறக்கப்பட உள்ளது.
இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாஹேப் அம்பேத்கரின் சிலைக்கு சமூக நீதிக்கான சிலை என ஆந்திர அரசு பெயர் சூட்டியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த சிலை திறப்பில் பட்டியல் இன மக்களின் வாக்கு அரசியல் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
தெலங்கானாவில்125 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலையை முன்னாள் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் திறந்து வைத்தார். அதைவிட பிரம்மாண்டமாக தற்போது ஆந்திராவில் சிலை நிறுவப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு தேர்தலில் எப்படி சந்திர சேகர ராவுக்கு தலித் மக்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைத்ததோ, அதே போல் தமக்கு கிடைக்கும் என ஜெகன் நம்புவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
விஜயவாடாவின் ஸ்வராஜ் மைதானத்தில் 81 அடி உயரம் கொண்ட பீடத்தில், 125 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டம் 404 கோடி ரூபாய் செலவில் 18.81 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக 400 டன் எடையுள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்படுள்ளது.
உலகின் உயரமான 50 சிலைகளுக்கான பட்டியலில் ஆந்திராவில் உள்ள அம்பேத்கர் சிலையும் இணைந்துள்ளது. சிலை இருக்கும் பகுதி முழுமையாக பசுமையானதாக மாற்றப்பட்டுள்ளதோடு, பீடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஆறு நீர்நிலைகள், மையத்தில் இசை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், இரண்டாயிரம் இருக்கைகள் கொண்ட திரையரங்கம் மற்றும் பத்தாயிரம் புத்தகங்களை உள்ளடக்கிய நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும் பித்யேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.