இந்தியா

இந்தியாவில் முதல் நாளில் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் முதல் நாளில் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Veeramani

(கோப்பு புகைப்படம்)

இந்தியாவில் இன்று முதல் நாளில் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இத்திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும் இது குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்களை கேட்டுக்கொண்டார்

ஒட்டுமொத்த இந்தியாவையே கடந்த 11 மாதங்களாக ஆட்டிப்படைத்து வருகிறது கண்ணுக்கு தெரியாத சின்னஞ்சிறு கிருமி. இதன் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை போடும் பணி நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் பேசிய பிரதமர், கொரோனாவை எதிர்த்து போராடிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்துவது மூலம் அவர்களுக்கு நாடு மரியாதை செய்துள்ளதாக தெரிவித்தார். தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவுடன் முகக்கவசங்களை நீக்கிவிடவேண்டாம் என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரே நோய் எதிர்ப்பு ஆற்றல் ஏற்படும் எனவும் பிரதமர் கூறினார்.

இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிதான் உலகிலேயே விலை குறைவானது என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை என்றும் அது குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை பார்த்து உலகமே வியக்கிறது என்றும் இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிக்கு எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

நாடெங்கும் சுமார் 3 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. டெல்லியை தொடர்ந்து தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் போடப்படும் இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார். டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை ஏ.கே.சிங் ராணாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவன தலைவர் அதர் பூனாவால்லாவும் ஊசி போட்டுக்கொண்டார்.