இந்தியா

22 கால்பந்து மைதானங்களுக்கு இணை; 10ஆயிரம் படுக்கைகள் - டெல்லியில் பிரம்மாண்ட மருத்துவமனை

22 கால்பந்து மைதானங்களுக்கு இணை; 10ஆயிரம் படுக்கைகள் - டெல்லியில் பிரம்மாண்ட மருத்துவமனை

webteam

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் பிரம்மாண்ட தற்காலிக மருத்துவமனை தயாராகி வருகிறது

டெல்லியில் உள்ள சத்தர்பூரில் மத்திய அரசு இந்த பிரம்மாண்ட தற்காலிக மருத்துவமனையை உருவாக்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பத்தாயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை முழுவதும் 18ஆயிரம் டன் ஏசியால் குளிரூட்டப்படவுள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை 22 கால்பந்து மைதானங்களுக்கு இணையானது. உலகிலேயே கொரோனாவுக்கான தற்காலிக மருத்துவமனைகளில் மிகப்பெரியது எனக் கூறப்படும் இந்த மருத்துவமனையில் 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 1400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கழிப்பறை வசதிகள், கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றும் இயந்திரங்கள், தண்ணீர் இணைப்பு என அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டு வருவதாகவும், மருத்துவமனைக்குள் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.மருத்துவமனை வாசல் வரை உறவினர்கள் வந்து செல்லலாம் என்றும் நோய் குணமடைந்தவர்கள் மருத்துவமனை வாசலில் அவரவர்களின் உறவினர்களுடன் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சிகிச்சை பெறுபவர்கள் செல்போன், லேப்டாப் பயன்படுத்த தடை இல்லை, சார்ஜ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆடியோ, வீடியோ பார்க்க வேண்டுமென்றால் ஹெட்போன் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தயாராகி வரும் மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நேரில் பார்வையிட்டனர். இந்த பிரம்மாண்ட மருத்துவமனை ஜூலை மாதம் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.